Loading...
வரலாற்றில் முதன்முறையாக வீழ்ச்சி! ஏஐ போட்டியால் நஷ்டத்தை நோக்கிச் செல்லும் கூகுள்?
கூகுள் நிறுவனத்தில் முதன்முறையாக நெகட்டிவ் கேஷ் புளோ

வரலாற்றில் முதன்முறையாக வீழ்ச்சி! ஏஐ போட்டியால் நஷ்டத்தை நோக்கிச் செல்லும் கூகுள்?

எழுதியவர் Sekar Chinnappan
Jul 23, 2026
07:15 pm

செய்தி முன்னோட்டம்

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட், தனது பங்குச் சந்தை வரலாற்றிலேயே முதன்முறையாக 5.9 பில்லியன் டாலர் நெகட்டிவ் கேஷ் ஃபுளோவை இரண்டாம் காலாண்டில் பதிவு செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் நிலவும் தீவிரப் போட்டி காரணமாக டேட்டா சென்டர்கள், மேம்பட்ட ஏஐ சிப்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்காகப் பெருமளவில் நிதியை அள்ளி வீசி வருவதே இந்த திடீர் நிதி நெருக்கடிக்கு முதன்மை காரணமாகும். இதன் காரணமாக, நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான மூலதன செலவினக் கணிப்பை 205 பில்லியன் டாலராக ஆல்பபெட் உயர்த்தியுள்ளது.

முதலீடு

ஏஐ பந்தயத்தில் அதிகரிக்கும் முதலீடுகள்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான தேவைகள் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் நிலையில், கூகுள் நிறுவனம் மெட்டா, மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் ஆகிய போட்டி நிறுவனங்களுக்கு ஈடுகொடுத்து வருகிறது.

இந்த நான்கு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் சேர்ந்து 2026 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 725 பில்லியன் டாலருக்கும் அதிகமாக ஏஐ உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டாவது காலாண்டில் மட்டும் கூகுளின் மூலதன செலவு 44.9 பில்லியன் டாலராக உயர்ந்ததால், நிறுவனத்தின் கையிருப்பு கேஷ் ஃபுளோ மைனஸ் நிலைக்குத் தள்ளப்பட்டு முதலீட்டாளர்களை கவலையடையச் செய்துள்ளது.

வளர்ச்சி

கூகுள் கிளவுட் பிரிவின் மாபெரும் வளர்ச்சி

ஒருபுறம் இதுகுறித்த கவலை இருந்தாலும், அதிகரித்து வரும் ஏஐ முதலீடுகள் கூகுளின் கிளவுட் வணிகத்தில் மாபெரும் வருவாய் வளர்ச்சியை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.

கூகுள் கிளவுட் பிரிவின் வருவாய் கடந்த ஆண்டை விட 82 சதவீதம் அதிகரித்து 24.8 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.

மேலும் ஆந்த்ரோபிக் போன்ற முன்னணி ஏஐ நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் காரணமாக, கூகுளின் கிளவுட் ஆர்டர்களின் மதிப்பு 514 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இது தவிர, என்விடியா நிறுவனத்திற்கு போட்டியாக கூகுள் தயாரிக்கும் சொந்த டிபியூ சிப்களின் விற்பனை மூலமும் புதிய வருவாய் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

ஜெமினி ஏஐ

ஜெமினி 3.5 புரோ தாமதமும் நிலவும் கேள்விகளும்

வருவாய் வளர்ச்சி சிறப்பாக இருந்தபோதிலும், கூகுளின் அடுத்த கட்ட ஏஐ மாடலான ஜெமினி 3.5 புரோ வெளியீடு தாமதமானது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதனால் ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் ஆகிய நிறுவனங்களை விடக் கூகுள் பின்தங்கியுள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதைப் பற்றி பேசிய கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கோடிங் மற்றும் ஏஜென்டிக் ஏஐ துறைகளில் தங்களுக்கு சில முன்னேற்றங்கள் தேவை என்பதை ஒப்புக்கொண்டதுடன், ஜெமினி 4 மாடலுக்கான பயிற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டதாக நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

நிதி திரட்டல்

கடன் மற்றும் பங்குகளைப் பயன்படுத்தி நிதி திரட்டும் கூகுள்

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏஐ செலவுகள் அதிகரித்துள்ளதால், கூகுள் நிறுவனம் சுமார் 100 பில்லியன் டாலர் கடனைப் பெற்றுள்ளதுடன், இரண்டு தசாப்தங்களில் முதன்முறையாக 85 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ய நகர்ந்துள்ளது.

வழக்கமாக சொந்த லாபத்திலிருந்து முதலீடு செய்து வந்த நிறுவனம், தற்பொழுது கடன் மற்றும் புதிய பங்குகள் மூலம் நிதியைத் திரட்டி வருகிறது.

ஏஐ தொழில்நுட்ப மாற்றம் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதால், சந்தையில் தங்களது முதன்மை இடத்தை நிலலைநிறுத்த இந்த பிரம்மாண்டமான முதலீடுகள் மிகவும் அவசியமானவை என்று கூகுள் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

ADVERTISEMENT