கச்சா எண்ணெய் தட்டுப்பாடு: இந்தியாவுக்கு ஆபத்தா? கோல்ட்மேன் சாக்ஸ் எச்சரிக்கை; முழு விவரம்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை சந்தித்துள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் நீண்ட காலம் நீடிக்கும் என்ற அச்சத்தினால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 110 டாலரையும், அமெரிக்காவின் டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் 115 டாலரையும் தாண்டியுள்ளது. இந்திய சந்தையிலும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 10,422 ரூபாயைத் தொட்டுள்ளது. இந்த விலை உயர்வு மற்றும் விநியோகத் தடைகள் உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்தி வரும் நிலையில், கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் ஆசிய நாடுகள், குறிப்பாக இந்தியா எதிர்கொள்ளப் போகும் சவால்கள் குறித்து ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
எச்சரிக்கை
ஆசிய நாடுகளுக்கு கோல்ட்மேன் சாக்ஸ் விடுத்துள்ள எச்சரிக்கை
உலகின் மொத்த சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தேவையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள ஆசிய நாடுகள், தங்களுக்குத் தேவையான எரிபொருளில் பாதியை வளைகுடா நாடுகளிலிருந்தே பெறுகின்றன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் விநியோகம் முடங்கியுள்ளதால், ஆசியா முழுவதும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் தற்காப்புக்காக அதிகப்படியான கச்சா எண்ணெய் இருப்பை வைத்துள்ள நிலையில், இந்தியா, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் இந்த விநியோகத் தடையால் நேரடிப் பாதிப்பைச் சந்திக்கக்கூடும். தற்போது மற்ற நாடுகளிலிருந்து எரிபொருளைப் பெற்று நிலைமையைச் சமாளித்து வந்தாலும், வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமடையலாம் என கோல்ட்மேன் சாக்ஸ் எச்சரித்துள்ளது.
பாதிப்புகள்
இந்தியாவுக்கு ஏற்படும் நேரடிப் பாதிப்புகள் என்ன?
இந்தியாவைப் பொறுத்தவரை, நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் முற்றிலும் முடங்கும் நிலை இன்னும் ஏற்படவில்லை என்றாலும், குறிப்பிட்ட சில எரிபொருட்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, விமான எரிபொருள் விநியோகத்தில் 76 சதவீதம் வரையிலும், எரிபொருள் எண்ணெய் விநியோகத்தில் 55 சதவீதம் வரையிலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என ஆய்வு கூறுகிறது. இது தவிர, பிளாஸ்டிக் மற்றும் ரசாயனத் தொழிலுக்குத் தேவையான நாப்தா விநியோகமும் 43 சதவீதம் வரை பாதிக்கப்படலாம். இது தொழிற்சாலைகளின் உற்பத்திச் சங்கிலியைப் பாதிப்பதோடு, ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுக்கும்.
தாக்கம்
எரிபொருள் இருப்பு மற்றும் விலை ஏற்றத்தின் தாக்கம்
மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவிடம் உள்ள எரிபொருள் இருப்பு குறைவாகவே உள்ளது. இந்தியாவிடம் சுமார் 20 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் 16 நாட்களுக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. பிப்ரவரி மாத இறுதியில் இருந்து விமான எரிபொருள் மற்றும் டீசல் விலைகள் சர்வதேச அளவில் சுமார் 150 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இந்தியாவில் மட்டும் ஒரு பீப்பாய் விமான எரிபொருள் 137 டாலர் வரையிலும், டீசல் 198 டாலர் வரையிலும் உயர்ந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் விரைவில் ஒரு தீர்வு கிடைக்காவிட்டால், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு என்பது சாமானிய மக்களின் வாழ்க்கையையும், நாட்டின் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும்.