Page Loader
டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் கவலைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு
வர்த்தகப் போர் கவலைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு

டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் கவலைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு

எழுதியவர் Sekar Chinnappan
Feb 20, 2025
03:01 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கைகள் குறித்த வளர்ந்து வரும் அச்சங்களுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பைத் தேடியதால் இன்று (பிப்ரவரி 20) தங்கத்தின் விலைகள் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளன. பங்கு வர்த்தகத்தில் தங்கம் 0.5% உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு $2,945.83 ஆக உயர்ந்தது. இன்றைய அமர்வின் போது சிறிது நேரம் அவுன்ஸ் ஒன்றுக்கு $2,947.11 ஆக சாதனை அளவை எட்டியது.

சந்தை

சந்தையில் தங்க வர்த்தகம்

இந்த ஆண்டு சந்தையில் தங்கம் 12% உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டு வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க ஃபியூச்சர்ஸ் மார்க்கெட்டிலும் தங்கம் 0.9% அதிகரித்து அவுன்ஸ் ஒன்றுக்கு $2,963.80 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில், 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ₹8,804 ஆக உயர்ந்துள்ளது என்று குட் ரிட்டர்ன்ஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.

காரணம்

தங்க விலை உயர்வுக்கான காரணங்கள்

உலகளாவிய வர்த்தகப் போர் மற்றும் பணவீக்க அபாயங்கள் குறித்த முதலீட்டாளர்களின் கவலையே விலை உயர்வுக்கு பிரதான காரணமாக உள்ளது. ஜனாதிபதி டிரம்பின் சீன இறக்குமதிகள் மீதான 10% வரி மற்றும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான 25% வரி பொருளாதார நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளன. மரக்கட்டைகள், கார்கள், செமிகண்டக்டர்கள் மற்றும் மருந்துகள் மீதான கூடுதல் வரிகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன. இது சந்தைகளை மேலும் பாதிக்கிறது. ஃபெடரல் ரிசர்வ் நிறுவனத்தின் சமீபத்திய கூட்டத்தில் இந்த வர்த்தகக் கொள்கைகள் காரணமாக பணவீக்கம் அதிகரிப்பது குறித்த கவலைகளையும் சுட்டிக்காட்டப்பட்டது.

கணிப்பு

எதிர்காலக் கணிப்பு

தொடர்ச்சியான பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் உறுதியற்ற தன்மையுடன், தங்கம் விரைவில் ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு $3,000 ஐ எட்டக்கூடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். உலகளாவிய வர்த்தகம் மற்றும் பணவீக்கம் ஆகிய இரண்டும் நிச்சயமற்ற நிலையில் உள்ளது தங்க விலை உயர்வுக்கான பிரதான காரணம் என்று கேசிஎம் வர்த்தகத்தின் தலைமை சந்தை ஆய்வாளர் டிம் வாட்டரர் கூறினார். தங்கத்தின் பாதுகாப்பான முதலீட்டுத் தன்மை வலுவாக உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அதை பொருளாதார ஏற்ற இறக்கத்திற்கு எதிரான ஒரு பாதுகாப்பாகக் கருதுகின்றனர்.