LOADING...
தங்கம் வாங்குறீங்களா? நகை, காயின், டிஜிட்டல் கோல்ட்; எதற்கு எவ்வளவு வரி? லாபத்தைக் குறைக்கும் வரிகளிலிருந்து தப்பிப்பது எப்படி?
தங்கத்தின் பல்வேறு வகைகள் மற்றும் வரி விதிப்பு முறைகள்

தங்கம் வாங்குறீங்களா? நகை, காயின், டிஜிட்டல் கோல்ட்; எதற்கு எவ்வளவு வரி? லாபத்தைக் குறைக்கும் வரிகளிலிருந்து தப்பிப்பது எப்படி?

எழுதியவர் Sekar Chinnappan
Jan 18, 2026
11:55 am

செய்தி முன்னோட்டம்

இந்தியக் குடும்பங்களில் தங்கம் வாங்குவது என்பது பல தலைமுறைகளாக ஒரு எளிய நிதி முடிவாக இருந்து வருகிறது. முன்பு மக்கள் தங்கத்தை நகையாக வாங்கிச் சேமித்து வைத்தனர். ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. இப்போது தங்கம் என்பது நகைகள் மட்டுமின்றி, தங்க நாணயங்கள், சாவரின் கோல்ட் பாண்ட்ஸ் (SGB), கோல்ட் இடிஎஃப் (ETF), கோல்ட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் டிஜிட்டல் தங்கம் எனப் பல வடிவங்களில் கிடைக்கிறது. இவை அனைத்தும் தங்கத்தின் விலையைப் பிரதிபலித்தாலும், இவற்றிற்கான வரி விதிப்பு முறைகள் முற்றிலும் மாறுபட்டவை.

வகைகள்

தங்க நகை மற்றும் டிஜிட்டல் தங்கம்

நகை, நாணயங்கள் அல்லது டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கும் போது 3 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இவற்றை விற்கும் போது கிடைக்கும் லாபத்திற்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். நீங்கள் 24 மாதங்களுக்கும் குறைவாகத் தங்கத்தை வைத்திருந்து விற்றால், அது குறுகிய கால மூலதன ஆதாயமாகக் கருதப்பட்டு, உங்கள் வருமான வரி அடுக்கின் படி வரி விதிக்கப்படும். 24 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால், அது நீண்ட கால மூலதன ஆதாயமாகக் கருதப்பட்டு 12.5 சதவீத வரி விதிக்கப்படும்.

பங்குச் சந்தை

தங்க இடிஎஃப் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்

தங்க இடிஎஃப் (Gold ETF) மற்றும் தங்க மியூச்சுவல் ஃபண்டுகள் நிதிச் சொத்துகளாகக் கருதப்படுகின்றன. இவற்றிற்கு வாங்கும் போது ஜிஎஸ்டி கிடையாது. இவற்றின் மீதான நீண்ட கால மூலதன ஆதாய வரி 12.5 சதவீதமாக உள்ளது (இன்டெக்சேஷன் பலன் இன்றி). உடல் தங்கத்தை விடக் குறைந்த கால அளவிலேயே இவை நீண்ட கால முதலீடாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், அடிக்கடி மாறும் விதிமுறைகளால் முதலீட்டாளர்கள் தற்போதைய வரி விகிதங்களைச் சரிபார்த்து முதலீடு செய்வது அவசியம்.

Advertisement

பத்திரம்

சாவரின் கோல்ட் பாண்ட் (SGB) - வரிச் சலுகை மிக்கது

அனைத்துத் தங்க முதலீடுகளையும் விட சாவரின் கோல்ட் பாண்ட் (Sovereign Gold Bonds) அதிக வரிச் சலுகைகளைக் கொண்டது. இந்த பாண்டுகளை முதிர்வுக் காலம் (8 ஆண்டுகள்) வரை வைத்திருந்து, ரிசர்வ் வங்கியிடம் (ஆர்பிஐ) ஒப்படைக்கும் போது கிடைக்கும் மூலதன ஆதாயத்திற்கு முழுமையான வரி விலக்கு உண்டு. இருப்பினும், இதிலிருந்து கிடைக்கும் ஆண்டு வட்டி (2.5%) உங்கள் வருமானத்துடன் சேர்க்கப்பட்டு வரி விதிக்கப்படும். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இதுவே மிகவும் லாபகரமானத் தேர்வாகும்.

Advertisement

தவறுகள்

முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள்

தங்கத்தை விற்கும் போது பலர் செய்யும் பொதுவான தவறு, ஹோல்டிங் பீரியட் (Holding Period) எனப்படும் கால அளவைக் கவனிக்கத் தவறுவதுதான். 24 மாதங்களுக்கு ஒரு சில மாதங்கள் முன்னதாக விற்றால் கூட, நீங்கள் அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். மேலும், நகைகள் மற்றும் டிஜிட்டல் தங்கத்திற்கான ரசீதுகளைச் சரியாகப் பராமரிக்காதது வரி கணக்கீட்டின் போது சிக்கல்களை ஏற்படுத்தும். வரிச் சுமையைக் குறைக்கப் பிரிவு 54EC அல்லது 54F போன்ற சட்டப்பூர்வ வழிகளைப் பயன்படுத்தலாம்.

Advertisement