இலவச டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தா வசதியுடன் கூடிய மொபைல் ரீசார்ஜ் திட்டங்கள்
இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வரும் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள், இலவச டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவுடன் கூடிய மொபைல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றன. சமீபத்தில் ரூ.869 விலையிலான ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ஏர்டெல். இந்தத் திட்டத்தில் மூன்று மாத டிஸ்னி+ஹாட்ஸ்டார் (மொபைல்) சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. முன்னர் அளித்துவந்த ரூ.839 திட்டத்தை மேம்படுத்தி இலவச OTT சந்தாவுடன் கூடிய மேற்கூறிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஏர்டெல். இந்தத் திட்டத்தில், தினசரி 2GB அதிவேக டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்கள் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகின்றன. கூடுதல் வசதிகளாக, டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவுடன், வரம்பற்ற 5G பயன்பாடு மற்றும் விங்க் மியூசிக் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.
டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவுடன் கூடிய ஜியோ ரீசார்ஜ் திட்டம்:
ஜியோவும் இலவச டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவுடன் கூடிய இரண்டு ப்ரீபெய்டு மொபைல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. ரூ.899 மதிப்பிலான திட்டத்தில், 84 நாட்களுக்கு, தினசரி 2GB டேட்டாவுடன், மூன்று மாத டிஸ்னி+ஹாட்ஸடார் (மொபைல்) சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதலாக வரம்பற்ற 5G டேட்டா வசதியும் உண்டு. ரூ.3,178 மதிப்பிலான திட்டத்தில், 1 வருடத்திற்கு, தினசரி 2GB டேட்டாவுடன், ஒரு வருட டிஸ்னி+ஹாட்ஸடார் (மொபைல்) சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திலும் வரம்பற்ற 5G டேட்டா வசதியை அளித்திருக்கிறது ஜியோ. மேலும், மேற்கூறிய திட்டங்களுடன் இலவச ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுடு பயன்பாடும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வோடபோன் ஐடியா ரீசார்ஜ் திட்டங்கள்:
ஜியோ மற்றும் ஏர்டெல்லைப் போலவே, வோடபோன் ஐடியா நிறுவனமும் இலவச டிஸ்னி+ஹாட்ஸ்டார் (மொபைல்) சந்தாவுடன் கூடிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி, ரூ.601, ரூ.901, ரூ.1,066 மற்றும் ரூ.3,099 ஆகிய மதிப்புடைய திட்டங்களில் ஒரு வருட இலவச டிஸ்னி+ஹாட்ஸ்டார் (மொபைல்) சந்தா வசதியை வழங்குகிறது வோடபோன் ஐடியா. மேலும், ரூ.151, ரூ.399 மற்றும் ரூ.499 ஆகிய மதிப்புடைய திட்டங்களில் மூன்று மாத டிஸ்னி+ஹாட்ஸ்டார் (மொபைல்) சந்தா சேவையை வழங்குகிறது அந்நிறுவனம். இந்தியாவில் மூன்று மாத டிஸ்னி+ஹாட்ஸ்டார் (மொபைல்) சந்தா சேவையானது ரூ.149 விலையிலும், ஒரு வருட டிஸ்னி+ஹாட்ஸ்டார் (மொபைல்) சந்தா சேவையானது ரூ.499 விலையிலும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.