LOADING...
ரூ.15,000 கோடி Foxconn முதலீடு உண்மையா? தமிழக அமைச்சர் தகவல் vs நிறுவன மறுப்பு!
பாக்ஸ்கான் தரப்பு முதலீடு தகவலை மறுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ரூ.15,000 கோடி Foxconn முதலீடு உண்மையா? தமிழக அமைச்சர் தகவல் vs நிறுவன மறுப்பு!

எழுதியவர் Venkatalakshmi V
Oct 15, 2025
12:39 pm

செய்தி முன்னோட்டம்

தைவான் நாட்டை சேர்ந்த மின்னணு உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான், தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய உறுதி அளித்ததாகத் தமிழகத் தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்திருந்த நிலையில், பாக்ஸ்கான் தரப்பு இந்த தகவலை மறுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் ராபர்ட் வூ, நேற்று முன்தினம் (அக்டோபர். 13) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். சந்திப்புக்கு பின்னர் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "பாக்ஸ்கான் நிறுவனம், தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடுகளையும், 14,000 வேலை வாய்ப்புகளையும் உறுதி செய்துள்ளது" என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார். அதை நிறுவனம் தற்போது மறுத்து, முதலீடு குறித்து பேசவில்லை என தெரிவித்துள்ளது.

மறுப்பு

பாக்ஸ்கான் தரப்பு மறுப்பு

இதுகுறித்து பாக்ஸ்கான் தரப்பில் வெளியான அறிக்கையில், "ஃபாக்ஸ்கானின் புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியப் பிரதிநிதி ராபர்ட் வூ முதலமைச்சரைச் சந்தித்தபோது, புதிய முதலீடுகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதலீட்டின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஃபாக்ஸ்கான் மாநிலத்தில் ரூ.15,000 கோடி முதலீடு செய்து 14,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று ராஜா சமூக ஊடகங்களில் அறிவித்த ஒரு நாள் கழித்து இந்த விளக்கம் வந்துள்ளது.

விளக்கம்

தமிழக அரசு அதிகாரி விளக்கம்

இது தொடர்பாக தொழில்துறை அதிகாரி ஒருவர் அளித்த விளக்கத்தில், "பாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்வதாகச் சில மாதங்களுக்கு முன்பே உறுதி அளித்தது. பல மாநிலங்களும் அவர்களைத் தொடர்பு கொண்டு முதலீடு செய்ய வலியுறுத்துவதால், இந்தத் தகவலை இப்போதைக்கு வெளியில் தெரிவிக்க வேண்டாம் என நிறுவனம் கேட்டுக்கொண்டது". "அதன்படி, ரகசியம் காக்கப்பட்டது. தற்போது, ராபர்ட் வூ முதலமைச்சரைச் சந்தித்த நிலையில், அமைச்சர் ராஜா வழிகாட்டி நிறுவனம் மூலம் இந்தத் தகவலை தெரிவித்தார். எனினும், இந்நிறுவனம் தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடு செய்வது உறுதி" என்று தெரிவித்தார்.

கண்டனம்

பா.ஜ.க. கண்டனம்

இந்த சம்பவம் குறித்துத் தமிழக பா.ஜ.க. தலைமைச் செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன் வெளியிட்ட அறிக்கையில், "எதற்காக இப்படிப்பட்ட தவறான பதிவை தொழில் துறை அமைச்சரும், முதல்வரும் செய்தனர் என்று புரியவில்லை". "மக்களைத் திசை திருப்பி இல்லாத ஒன்றை இருப்பதாகவும், நடக்காத ஒன்றை நடந்ததாகவும் பதிவிட்டது கண்டனத்திற்குரியது. இதேபோன்றுதான் மற்ற முதலீடுகள் குறித்தும் அரசு கூறி வருகிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.