பழைய வங்கி கணக்குகளை நினைவில் வைக்க முடியவில்லையா? உரிமை கோரப்படாத பணத்தை மீட்க உதவும் உத்கம் தளம்
செய்தி முன்னோட்டம்
பொதுமக்கள் தங்களது பழைய வங்கிக் கணக்குகளை நினைவில் வைத்திருக்க முடியாமல் சிரமப்பட்டாலோ அல்லது பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் கணக்குகளில் உள்ள பணத்தைக் கண்டறிய விரும்பினாலோ, அவர்களுக்கு உதவ இந்திய ரிசர்வ் வங்கி உத்கம் (UDGAM) என்ற பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கோரப்படாமல் இருக்கும் வைப்புத்தொகை விவரங்களை வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் எளிதில் தேடித் தெரிந்து கொள்ளும் வகையில் இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பொதுமக்கள் https://udgam.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டறியும் நடைமுறை
விவரங்களை பதிவு செய்து கண்டறியும் எளிய நடைமுறை
இந்த இணையதளத்தின் மூலம் பணத்தைத் தேடுவதற்கு, முதலில் https://udgam.rbi.org.in என்ற தளத்திற்குள் சென்று பயனாளர் விவரங்களை பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
அதன்பின்னர், வங்கிக் கணக்கு வைத்திருப்பவரின் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பான் கார்டு (PAN Card) எண் ஆகிய அடிப்படைத் தகவல்களை உள்ளீடு செய்து தேடினால், சம்பந்தப்பட்ட வங்கிகளில் உரிமை கோரப்படாமல் உள்ள வைப்புத்தொகை விவரங்கள் திரையில் தோன்றும்.
இருப்பினும், இந்த இணையதளம் வைப்புத்தொகை இருப்பதைத் தேடிக் கண்டறியும் வசதியை மட்டுமே வழங்கும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கே.ஒய்.சி ஆவணம்
வட்டியுடன் பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?
இணையதளத்தில் தங்களது பணம் இருப்பதை உறுதி செய்தவுடன், வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட வங்கியின் எந்தவொரு கிளைக்கும் நேரில் சென்று தங்களது KYC (ஆதார், பான் உள்ளிட்ட அடையாள மற்றும் முகவரிச் சான்றுகள்) ஆவணங்களைச் சமர்ப்பித்து முறைப்படி உரிமை கோர வேண்டும்.
ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, தகுதியின் அடிப்படையில் உரிய வட்டியுடன் அந்தத் தொகை வாடிக்கையாளர்களுக்குத் திரும்ப வழங்கப்படும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் விழிப்புணர்வுத் தகவல்களைப் பெற வாடிக்கையாளர்கள் https://rbikehtahai.rbi.org.in/tamil/rbi-udgam-portal.html என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் எனவும், எப்போதும் விழிப்புடன் செயல்படுமாறும் ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.