3 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு: கார் உற்பத்தியை தொடங்கப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு
தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தி செய்யப்படும் என ஃபோர்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை அருகே உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் ஏற்றுமதிக்கான கார் உற்பத்தி மேற்கொள்ளப்படும் எனவும், ஏற்கனவே இருந்த 12,000 ஊழியர்களுடன் கூடுதலாக 3,000 ஊழியர்களை பணியில் அமர்த்தவும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக 2 நாட்களுக்கு முன் தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு நிறுவனத்தை திறக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவில் அந்நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Twitter Post
தொழிற்சாலைகளை மூடிய ஃபோர்ட்
முந்தைய காலங்களில், ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் செயல்பட்டு வந்தன. ஆனால், கடைசி 2 ஆண்டுகளில் நஷ்டம் காரணமாக இந்த ஆலைகள் மூடப்பட்டன. குஜராத்தில் உள்ள தொழிற்சாலை டாடா நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் சென்னையை அடுத்த மறைமலை நகரிலுள்ள தொழிற்சாலையோ மூடப்பட்டது. இந்த நிலையில் தான், முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு தொழிற்சாலையை திறக்க பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ஃபோர்டு நிறுவனம்.