ஸ்டார்ட்அப்கள் மற்றும் விவசாயிகளுக்காக சட்டங்களில் திருத்தம்: நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்கிறார்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தொழில் தொடங்குவதை எளிதாக்கவும், சிறு நிறுவனங்களின் பணிச்சுமையைக் குறைக்கவும் வழிவகை செய்யும் 'நிறுவன சட்டங்கள் (திருத்த) மசோதா 2026'-ஐ (Corporate Laws Amendment Bill, 2026) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று லோக்சபாவில் தாக்கல் செய்கிறார். இந்த மசோதாவின் மூலம் 2013-ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டம் (Companies Act) மற்றும் 2008-ஆம் ஆண்டின் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மைச் சட்டம் (LLP Act) ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. குறிப்பாக, சிறு நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் சந்திக்கும் சிறிய அளவிலான விதிமீறல்களை குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து விடுவித்து, அவற்றுக்கு அபராதம் மட்டுமே விதிக்கும் வகையில் சட்டங்கள் எளிமையாக்கப்பட உள்ளன.
விவசாயம்
விவசாயிகளுக்கு முன்னுரிமை
விவசாயம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள 'உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு' இந்த மசோதா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இத்தகைய நிறுவனங்கள் பதிவு செய்வதையும், விதிமுறைகளை பின்பற்றுவதையும் எளிதாக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்களது பொதுக்குழு கூட்டங்களை Virtual அல்லது Hybrid முறையில் நடத்த அனுமதிப்பது, ஆவணங்களை மின்னணு முறையில் மட்டுமே சமர்ப்பிப்பது போன்ற நவீன வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. ராஜீவ் கௌபா தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நம்பிக்கையின் அடிப்படையிலான பொருளாதார நிர்வாகத்தை (Trust-based governance) வலுப்படுத்துவதே இந்த மசோதாவின் முதன்மை நோக்கம் என்று நிதியமைச்சர் ஏற்கனவே பட்ஜெட் உரையில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.