சம்பளத்தை துண்டித்ததால் பிரச்சனை: எலான் மஸ்க்-க்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் முன்னாள் ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால்
ட்விட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உட்பட நான்கு முன்னாள் உயர்மட்ட ட்விட்டர் நிர்வாகிகள், எலான் மஸ்க் தங்களுக்கு $128 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை இன்னும் வழங்கவில்லை என்று கூறி வழக்குத் தொடுத்துள்ளனர். பராக் அகர்வாலுடன் இணைந்து ட்விட்டரின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், ட்விட்டரின் முன்னாள் தலைமை சட்ட அதிகாரி விஜய காடே, முன்னாள் பொது ஆலோசகர் சீன் எட்ஜெட் ஆகியோரும் இந்த வழக்கை தொடுத்துள்ளனர். நீண்டகாலமாக ட்விட்டரை நிர்வகித்து வந்த அதிகாரிகள் இவர்கள் ஆவர். ட்விட்டர் நிறுவனத்தின் வாழ்விலும் தாழ்விலும் இவர்கள் அதோடு இருந்திருக்கின்றனர்.
ட்விட்டரின் முன்னாள் அதிகாரிகள் மீது பொய்யாக குற்றம்சாட்டப்பட்டதா?
ஆனால், ட்விட்டர் எலான் மஸ்க்கின் கைக்கு சென்ற பிறகு, அவர் திடீரென்று மனதை மாற்றி ட்விட்டரின் முக்கிய அதிகாரிகளை மாற்ற முடிவு செய்தார் என்று கூறப்படுகிறது. அதற்காக, உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் கடுமையான அலட்சியத்துடன் செயல்பட்டதாகவும், தவறான நடத்தையோடு இருந்ததாகவும் அவர்கள் மீது குற்றம்சாட்டிய எலான் மஸ்க், அவர்களை பணிநீக்கம் செய்ததாக பாதிக்கப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த குற்றசாட்டை ட்விட்டரின் முன்னாள் அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். மேலும், தங்களுக்கு $128 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை எலான் மஸ்க் வழங்க வேண்டி இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளனர்.