Loading...
"PF பணத்தை எடுக்க புதிய கட்டுப்பாடுகள்!" 12 மாத காத்திருப்பு காலம் மற்றும் 3 பிரிவுத் திட்டம்; மத்திய அரசு அதிரடி
புதிய EPF விதிகள் 2026

"PF பணத்தை எடுக்க புதிய கட்டுப்பாடுகள்!" 12 மாத காத்திருப்பு காலம் மற்றும் 3 பிரிவுத் திட்டம்; மத்திய அரசு அதிரடி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 08, 2026
05:26 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தொழிலாளர்களின் நலன் மற்றும் ஓய்வூதியப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், 1952 ஆம் ஆண்டின் பழைய பிஎஃப் விதிகளுக்குப் பதிலாக புதிய ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டம் 2026 அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள முறைப்படி அடிப்படை சம்பள உச்சவரம்பான ரூ.15,000க்கு தொழிலாளி மற்றும் நிறுவனம் தலா 12% பங்களிப்பை வழங்க வேண்டும். புதிய விதிகளின்படி, ரூ. 15,000க்கு மேல் ஊதியம் பெறும் ஊழியர்கள் விரும்பினால் கூடுதல் தொகையை தன்னார்வமாக சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

3 புதிய பிரிவுகள்

பகுதித் தொகை திரும்பப்பெற எளிமையான 3 புதிய பிரிவுகள்

முந்தைய பிஎஃப் திட்டத்தில் பகுதித் தொகையைப் பெறுவதற்கு 13 வெவ்வேறான கடினமான பிரிவுகள் இருந்த நிலையில், புதிய 2026 விதிகளில் அவை எளிமைப்படுத்தப்பட்டு 3 பிரிவுகளாகக் குறைக்கப்பட்டுள்ளன.

சுகாதாரம்/மருத்துவம், கல்வி மற்றும் திருமணம் (முதல் பிரிவு), சொந்த வீடு/மனை வாங்குதல் மற்றும் கடன் அடைத்தல் (இரண்டாம் பிரிவு) மற்றும் சிறப்புச் சூழ்நிலைகள் (மூன்றாம் பிரிவு) எனப் பிரிக்கப்பட்டுள்ளன.

12 மாத உறுப்பினராக இருக்கும் நபர்கள் கல்விக்கு 10 முறையும், திருமணத்திற்கு 5 முறையும் பகுதித் தொகையை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

குறைந்தபட்ச இருப்பு

25% குறைந்தபட்ச இருப்பு மற்றும் முழுத் தொகை விதிகள்

ஓய்வூதிய கால சேமிப்பு முழுவதும் கரைந்து போவதைத் தடுக்கும் வகையில், பகுதித் தொகை எடுக்கும் போது கணக்கின் மொத்த சேமிப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதத் தொகையைக் கணக்கிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை கொண்டுவரப்பட்டுள்ளது.

மீதமுள்ள 75% தகுதியுள்ள இருப்பை மட்டுமே தொழிலாளர்கள் எடுக்க முடியும்.

55 வயது நிறைவடைந்து ஓய்வு பெறுதல், நிரந்தர உடல் ஊனம், சுயவிருப்ப ஓய்வு மற்றும் வெளிநாட்டிற்கு நிரந்தரமாக செல்லுதல் போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டுமே 100% முழுத் தொகையையும் எடுக்க அனுமதி உண்டு.

ADVERTISEMENT

காத்திருப்புக் காலம்

வேலையை ராஜினாமா செய்தால் 12 மாதங்கள் காத்திருப்பு காலம்

தனியார் துறையில் வேலையை ராஜினாமா செய்யும் ஊழியர்கள் தங்களின் பிஎஃப் தொகையை முழுமையாகத் திரும்பப் பெறுவதற்கான காத்திருப்பு காலம் 2 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்திப் புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் தொடர்ந்து 12 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால் மட்டுமே விண்ணப்பித்துத் தனது கணக்கில் உள்ள முழுப் பணத்தையும் எடுக்க முடியும்.

இருப்பினும், திருமணத்திற்காக வேலையை ராஜினாமா செய்து விலகும் பெண் ஊழியர்களுக்கு இந்த 12 மாத காத்திருப்பு விதியிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT