Loading...
இரண்டே நாளில் 35% சரிந்த ஈமுத்ரா பங்குகள்; காரணம் என்ன?
இரண்டே நாளில் ஈமுத்ரா பங்குகள் 35% சரிவு

இரண்டே நாளில் 35% சரிந்த ஈமுத்ரா பங்குகள்; காரணம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Oct 22, 2026
05:06 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய சான்றிதழ் அதிகார அமைப்பால் வழங்கப்பட்ட எட்டு இடைநிலை சான்றிதழ்களில் பாதுகாப்புப் பிழை இருப்பதாக ஆராய்ச்சி ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, ஈமுத்ரா நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்தன. அக்டோபர் 21 அன்று 20 சதவீதம் சரிந்த நிலையில், அக்டோபர் 22 வர்த்தகத்தில் மேலும் 15.39 சதவீதம் சரிந்து ₹365.50 நிலையை எட்டியது. இதன் மூலம் இரண்டு வர்த்தக நாட்களில் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 35 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புப் பிழை

பாதுகாப்புப் பிழையின் பின்னணியும் சர்வதேசத் தடையும்

ஈமுத்ரா நிறுவனத்தின் சர்வதேச பொது விசை உள்கட்டமைப்பு (PKI) அமைப்பின் கீழ் வழங்கப்பட்ட சான்றிதழ்களின் ரகசிய குறியீடுகள் பலவீனமாக இருப்பதை அக்டோபர் 17 அன்று ஆய்வாளர் கண்டறிந்து கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து கூகுள் மற்றும் மொஸில்லா நிறுவனங்கள் அந்த சான்றிதழ்களை உடனடியாகத் முடக்கின.

இருப்பினும், அக்டோபர் 19 அன்றே பாதிக்கப்பட்ட எட்டு சான்றிதழ்களும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுவிட்டதாக ஈமுத்ரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு விளக்கம்

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம்

இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு இதனால் ஏற்பட்ட பாதிப்பு மிகவும் சிறிய அளவிலானது மற்றும் குறுகிய காலமே நீடித்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஈமுத்ராவின் டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ் மற்றும் இ-சைன் சேவைகள் முற்றிலும் பாதுகாப்பாக இயங்கி வருவதாகவும், அவற்றுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

ADVERTISEMENT

தரவுகள் பாதுகாப்பு

வாடிக்கையாளர் தரவுகள் பாதுகாப்பாக உள்ளதாக நிறுவனம் அறிவிப்பு

பாதிக்கப்பட்ட சான்றிதழ்கள் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு ஒருபோதும் கொண்டுவரப்படவில்லை என்பதால் வாடிக்கையாளர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஈமுத்ரா இணை நிறுவனர் கெளசிக் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் உள்கட்டமைப்பு ஊடுருவப்படவில்லை என்றும், எவ்விதத் தரவு மீறலும் நிகழவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதற்கிடையே, இந்திய கணினி அவசரக்கால பதிலளிப்புக் குழு முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள நிலையில், விசாரணை முடிவில் கூடுதல் விவரங்கள் பகிரப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT