
இனி Dream11 கிடையாது? ஆன்லைன் கேமிங் தடை சட்டத்தால் தளத்தை இழுத்து மூட முடிவு என தகவல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய ஃபேண்டசி ஸ்போர்ட்ஸ் தளமான Dream11, அதன் ரியல்-மணி கேமிங் பிரிவை மூடத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய ஆன்லைன் கேமிங் மசோதா, அனைத்து பண விளையாட்டுகளுக்கும் முழுமையான தடை விதித்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, டிரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹர்ஷ் ஜெயின் ஒரு உள் நிறுவனத் தகவலில், சட்டம் அமலுக்கு வந்த பிறகு தொடர்ந்து செயல்பட எந்த சட்டப்பூர்வ வழியும் இல்லை என்று ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். பணியில் இருக்கும் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் இருவருக்கும் இந்த மாற்றம் குறித்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
நெருக்கடி
நிதி நெருக்கடி
இந்த முடிவு டிரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு நெருக்கடி நிலையாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் அதன் வருவாயில் 90% க்கும் மேல் Dream11-ன் ஃபேண்டசி விளையாட்டுப் போட்டிகளில் இருந்துதான் வருகிறது. 2008 இல் ஹர்ஷ் ஜெயின் மற்றும் பவித் ஷெத் ஆகியோரால் தொடங்கப்பட்ட Dream11, 280 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன் இந்தியாவின் ஃபேண்டசி விளையாட்டு சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. நிதியாண்டு 2024-ல் மட்டும், ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் போது, இந்நிறுவனம் ₹9,600 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. ஆனால், FanCode மற்றும் DreamSetGo போன்ற பிற பிரிவுகள் குறைவான பங்களிப்பையே அளிப்பதால், புதிய தடை Dream Sports-ன் முக்கிய வர்த்தகத்தை கடுமையாகப் பாதிக்கிறது.