அதிக வளர்ச்சி கண்ட, 'வீட்டிலிருந்து வேலை பார்க்கும்' வசதியை அளிக்கும் நிறுவனங்கள்: புதிய ஆய்வு
கொரோனா காலத்தில் நோய் பரவல் உச்சத்தில் இருந்த போது, பல்வேறு துறைகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்களும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நடைமுறையை வழக்கமாக்கின. வீட்டிலிருந்து வேலை பார்ப்பது தான் புதிய வழக்கம் என்றாகி, இனி அலுவலகங்களே தேவையில்லையா என்ற கேள்விகள் கூட எழுத் தொடங்கின. ஆனால், கொரோனா பரவல் குறைந்தவுடன், தங்களது ஊழியர்களை மீண்டும் அலுவலகம் வந்து பணிபுரிய பல்வேறு நிறுவனங்கள் நிர்பந்தப்படுத்தத் தொடங்கின. முக்கியமாக அலுவலகம் வந்து தான் வேலை பார்க்க வேண்டும் என்ற கட்டாயமில்லாத தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும், தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு கட்டாயம் வரவேண்டும் எனக் கூறியது பல்வேறு நிலைகளிலும் பேசுபொருளானது.
வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
வீட்டிலிருந்தபடியே வேலை பார்ப்பதில் பல்வேறு தரப்பினருக்கும் பொருளாதார நன்மைகள் ஏற்பட்டது மறுக்க முடியாத உண்மை. வேலைவாய்ப்பிற்காகப் சொந்த ஊர்களை விட்டு வேறு நகரங்களில் வேலை பார்த்து வந்தவர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது வரப்பிரசாதமாக அமைந்தது. மீண்டும் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்க வேண்டும் என தங்களது நிறுவனம் நிர்பந்தப்படுத்தியதன் காரணத்தினாலேயே பல்வேறு ஊழியர்கள் தங்களது பணியிலிருந்து விலகிக் கொண்ட சம்பவங்களும் நடைபெற்றன. இந்நிலையில், வீட்டிலிருந்து வேலை பார்க்க வேண்டுமா அல்லது அலுவலகத்திலிருந்து வேலை பார்க்க வேண்டும் என்று கருத்து நிறுவனங்களின முன்னேற்றத்தை எவ்வாறு பாதித்திருக்கிறது என்பது குறித்த கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியிருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த பாஸ்டன் கன்சல்டிங் நிறுவனம்.
ஆச்சரியமளித்த ஆய்வு முடிவுகள்:
மூன்று ஆண்டுகளாக, 20-க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். அதன்படி, ஊழியர்களின் வேலையிடம் தொடர்பான விஷயங்களில் நெகிழ்வுத்தன்மை கொண்ட நிறுவனங்களின் முன்னேற்றமானது 2020 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் 21% வரை அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது, அலுவலகம் வந்துதான் வேலை பார்க்க வேண்டும் எனக் கூறும் நிறுவனங்களின் செயல்பாடுகளிலோ வெறும் 5% மட்டுமே முன்னேற்றம் இருப்பதாகவும் அந்த ஆய்வுறிக்கையின் முடிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், வீட்டிலிருந்து வேலை பார்க்கும் தேர்வை அளிக்கும் நிறுவனங்களில் பணிபுரியவே பெரும்பாலான ஊழியர்கள் விரும்புவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.