வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.38 உயர்வு
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்ததையடுத்து, இந்தியா முழுவதும் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.38 விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை செப்டம்பர் 1 முதல் சில்லறை விலைக்கு ரூ.1,855 ஆக உள்ளது. திருத்தப்பட்ட கட்டணங்கள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. முன்னதாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி, புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற மெட்ரோ நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 19 கிலோ சிலிண்டருக்கு 8.50 ரூபாய் உயர்த்தப்படுவதாக நிறுவனங்கள் அறிவித்தன.
சமீபத்திய மாதங்களில் விலை விலையில் ஏற்ற இறக்கம்
முன்னதாக ஜூலை மாதத்தில் ரூ.30 குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் விலை உயர்த்தப்பட்டது. அதே நேரம் ஜூன் 1 ஆம் தேதி, வணிக ரீதியான எல்பிஜி விலை சுமார் ரூ 69 குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் மே 1 ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ 19 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலையில் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி வீட்டு உபயோகத்திற்காக எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதற்கிடையே, எண்ணெய் நிறுவனங்கள் விமான எரிபொருளுக்கான (ஏடிஎஃப்) விலையையும் ஞாயிற்றுக்கிழமை குறைத்தன. இதன்படி, டெல்லியில் ஏடிஎஃப் விலை 97,975.72 கிலோ லிட்டரில் இருந்து ₹93,480.22 கிலோ லிட்டர் ஆக உள்ளது.