LOADING...
புதிய வருமான வரி விதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது மத்திய அரசு; முக்கிய அம்சங்கள் என்னென்ன?
புதிய வருமான வரி விதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது மத்திய அரசு

புதிய வருமான வரி விதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது மத்திய அரசு; முக்கிய அம்சங்கள் என்னென்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Mar 20, 2026
04:36 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு 2026 ஆம் நிதி ஆண்டிற்கான புதிய வருமான வரி விதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் புதிய வருமான வரிச் சட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இந்த விதிகள், வரும் ஏப்ரல் 1, 2026 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகின்றன. குறிப்பாக, சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்களின் வீட்டு வாடகைப்படி மூலம் பெறும் வரி விலக்கு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் சில அதிரடி மாற்றங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

வரி விலக்கு

8 நகரங்களுக்கு 50% HRA வரி விலக்கு: மத்திய அரசின் விரிவான பட்டியல்

இதுவரை மும்பை, கொல்கத்தா, டெல்லி மற்றும் சென்னை ஆகிய நான்கு மெட்ரோ நகரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த 50 சதவீத HRA வரி விலக்கு சலுகையை, தற்போது மேலும் நான்கு நகரங்களுக்கு மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகியவற்றுடன் பெங்களூர், ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களும் இந்த உயர் வரி விலக்கு பட்டியலுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த எட்டு நகரங்களில் வசிப்பவர்கள் தங்களின் அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதம் வரை HRA வரி விலக்குப் பெற மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. இதர நகரங்களில் வசிப்பவர்களுக்கு இது 40 சதவீதமாகவே நீடிக்கும்.

புதிய முறை

HRA வரி விலக்கு கணக்கிடும் புதிய முறை

மத்திய அரசின் புதிய விதிகளின்படி, பின்வரும் மூன்றில் எது குறைவான தொகையோ, அதற்கு வரி விலக்கு அளிக்கப்படும். நிறுவனம் வழங்கிய அசல் HRA தொகை. நீங்கள் செலுத்திய வாடகையில் இருந்து அடிப்படைச் சம்பளத்தில் 10 சதவீதத்தைக் கழித்தது போக மீதமுள்ள தொகை. பட்டியலிடப்பட்ட 8 நகரங்களில் வசிப்பவர்களுக்குச் சம்பளத்தில் 50%, இதர நகரங்களுக்கு 40%. இந்த மாற்றத்தினால் தகவல் தொழில்நுட்பத் துறையினர் அதிகம் வசிக்கும் பெங்களூர், புனே போன்ற நகரங்களில் உள்ள ஊழியர்கள் அதிக வரிச் சலுகையைப் பெறுவார்கள்.

Advertisement

படிவம் 124

புதிய படிவம் 124 அறிமுகம்: வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம்

வரி ஏய்ப்பைத் தடுக்கவும், வாடகை ஒப்பந்தங்களில் உள்ள உண்மைத் தன்மையைச் சரிபார்க்கவும் மத்திய அரசு 'படிவம் 124' என்ற புதிய நடைமுறையைக் கட்டாயமாக்கியுள்ளது. இனி HRA சலுகை கோரும் ஊழியர்கள், தங்களின் வீட்டு உரிமையாளருடன் தங்களுக்கு உள்ள உறவுமுறையை இந்தப் படிவத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். குறிப்பாக, பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு வாடகை செலுத்தி வரிச் சலுகை பெறுபவர்கள், இதனைத் துல்லியமாகத் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், வாடகைதாரர் செலுத்தும் பணத்தை வீட்டு உரிமையாளர் தனது வருமானமாக முறையாகக் கணக்குக் காட்டுகிறாரா என்பதை வருமான வரித் துறையினர் எளிதில் கண்காணிக்க முடியும்.

Advertisement