வெங்காய ஏற்றுமதி தடையை மார்ச் 31 வரை நீட்டித்தது மத்திய அரசு
நாட்டிற்குள் வெங்காய தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும், விலை ஏற்றத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும் இந்திய அரசாங்கம் வெங்காய ஏற்றுமதி தடையை மார்ச் 31, 2024 வரை நீட்டித்துள்ளது. டிசம்பர் 8, 2023 முதல் வெங்காய ஏற்றுமதி தடை நீடிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தடையை மார்ச் 31, 2024 வரை நீட்டித்துள்ளதாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபரில், வெங்காயம் விலை உயர்ந்தபோது நுகர்வோருக்கு உதவும் வகையில், சில்லறை சந்தையில் கிலோவுக்கு ரூ.25 என்ற மானிய விலையில் வெங்காய விற்பனையை மத்திய அரசு அதிகரித்தது.
கடந்த டிசம்பரில் 40.62% உயர்ந்த வெங்காய விலை
ஆகஸ்ட் 2023 இல் விதிக்கப்பட்ட ஏற்றுமதி தடை டிசம்பர் 31, 2023 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தடை நீக்கப்பட்டதாக வதந்தி பரவியதை அடுத்து, மொத்த வெங்காயத்தின் விலை 40.62% உயர்ந்து குவிண்டாலுக்கு ரூ.1,800ஆக விற்பனை செய்யப்பட்டது. வரவிருக்கும் பொதுத் தேர்தல் காரணமாகவும், குளிர்காலத்தில் வெங்காய உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் மார்ச் 31 க்குப் பிறகும் தடை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அமைச்சகங்களிடம் இருந்து பெறப்படும் அனுமதியின் பெயரிலும் ஒப்பந்தங்களின் பெயரிலும் நட்பு நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி அனுமதிக்கப்படுகிறது.