LOADING...
ஹோட்டல் பில்லில் இனி 'எல்பிஜி கட்டணம்' வசூலித்தால் கடும் நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி உத்தரவு
இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் CCPA கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது

ஹோட்டல் பில்லில் இனி 'எல்பிஜி கட்டணம்' வசூலித்தால் கடும் நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 26, 2026
03:05 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாட்டை காரணம் காட்டி, சில ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் தங்களது வாடிக்கையாளர் பில்லில் 'எல்பிஜி கட்டணம்' அல்லது 'எரிபொருள் மீட்புக் கட்டணம்' (Fuel Cost Recovery) என்ற பெயரில் கூடுதல் தொகையை வசூலித்து வருகின்றன. இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் சூழலால் எல்பிஜி விநியோகத்தில் அழுத்தம் இருந்தாலும், இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த சூழலைப் பயன்படுத்தி நுகர்வோரை ஏமாற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என CCPA ஆணையம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை

புதிய உத்தரவின் முக்கிய அம்சங்கள்

1. கூடுதல் கட்டணத்திற்குத் தடை: மெனு கார்டில் குறிப்பிட்டுள்ள விலை மற்றும் பொருந்தக்கூடிய வரிகளை(GST) தவிர, வேறு எந்த கூடுதல் கட்டணத்தையும் பில்லில் தானாகவோ அல்லது கட்டாயமாகவோ சேர்க்கக் கூடாது. 2. நியாயமற்ற வர்த்தக நடைமுறை: எரிபொருள், எல்பிஜி மற்றும் மின்சாரம் ஆகிய செலவுகள் ஒரு தொழிலை நடத்துவதற்கான அடிப்படைச் செலவுகள் ஆகும். அவற்றை வாடிக்கையாளர்கள் மீது தனியாகச் சுமத்துவது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ் 'நியாயமற்ற வர்த்தக நடைமுறை' எனக் கருதப்படும். 3. விலை வெளிப்படைத்தன்மை: அனைத்துச் செயல்பாட்டுச் செலவுகளையும் உணவின் விலையிலேயே சேர்த்துக்கொள்ள வேண்டும். பில்லில் மறைமுகக் கட்டணங்கள் இருப்பதை அரசு அனுமதிக்காது.

புகார்

புகார் அளிப்பது எப்படி?

உணவகங்களில் இதுபோன்ற கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டால், நுகர்வோர் முதலில் அதனை நீக்குமாறு கோரலாம். உணவகம் மறுத்தால், பின்வரும் முறைகளில் புகார் அளிக்கலாம்: தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன்: 1915 என்ற எண்ணை அழைக்கலாம். செயலி: National Consumer Helpline மொபைல் ஆப் அல்லது e-Jagriti போர்ட்டல் மூலம் புகார் செய்யலாம். அதிகாரிகள்: மாவட்ட ஆட்சியர் அல்லது நேரடியாக CCPA-விடம் புகார் அளிக்கலாம்.

Advertisement