ஆன்லைன் கேமிங் வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது அமைச்சரவை
ஆன்லைன் கேமிங், சூதாட்டம் மற்றும் குதிரைப் பந்தையங்களில் பந்தயம் வைக்கப்படும் பொருள் அல்லது பணத்தின் முகமதிப்பின் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிக்க கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற 50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்தப் புதிய வரிவிதிப்பை அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்தியாவில் அமல்படுத்தவும், அதன் பின் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தற்போது மேற்கூறிய வகையில் ஆன்லைன் கேமிங், சூதாட்டம் மற்றும் குதிரைப் பந்தையங்களின் மீது 28% வரி விதிக்க வழி வகை செய்யும் வகையிலான CGST சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் பெறும் முனைப்பில் மத்திய அரசு:
தற்போது மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய வரி விதிப்புக்கான சட்டத்திற்கு இரு அவைகளிலும் ஒப்புதல் பெற குறைந்த கால அவகாசமே வழங்கப்பட்டிருக்கிறது. தற்போதைய அமர்வு நாளையுடன் முடிவடையவிருக்கும் நிலையில், இந்த இரண்டு நாட்களுக்குள் இரு அவைகளிலும் புதிய சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் பெறும் முனைப்பில் மத்திய அரசு இருப்பதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலாகவிருக்கும் புதிய வரி விதிப்புக்கு ஏற்ற வகையில் மாநில ஜிஎஸ்டி சட்டங்களில் அந்நந்த மாநில அரசுகள் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கேமிங் நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்த பின்னரே, தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.