நாராயண மூர்த்தியின் 70 மணிநேரம் வேலை நேரம் எங்களுக்கு மட்டும்தானா? இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு இல்லையா?
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, கடந்த ஆண்டு அக்டோபரில் தற்போதுள்ள இளம் இந்தியர்கள் தங்கள் வேலை நேரத்தை வாரத்திற்கு குறைந்தது 70 ஆக நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததற்காக பரவலாக விமர்சிக்கப்பட்டார். அந்த விவகாரம் ஓய்வதற்குள் தற்போது அவரின் கூற்றை ஒரு CA நிபுணர் எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளது வைரலாகி வருகிறது. அதன் படி, "நாராயண மூர்த்தி சார், உங்கள் ஆலோசனையின் பேரில் நாங்கள், வரி வல்லுநர்கள் வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யத் தொடங்கினோம். வருமான வரி இணையதளத்தை சீராக இயக்க உங்கள் இன்ஃபோசிஸ் குழுவை வாரத்திற்கு ஒரு மணிநேரமாவது வேலை செய்யச் சொல்லுங்கள். முன்கூட்டியே நன்றி" என்று எழுதினார்.
CA நிபுணர் கருத்து
பின்னடைவுகளை சந்திக்கும் ஐடி போர்டல்
Moneycontrol வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டதன் படி, CA வல்லுநர்கள், IT போர்ட்டலைப் பயன்படுத்தும் போது தாமதங்கள் மற்றும் பின்னடைவுகளை எதிர்கொள்வதாகவும், வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) மற்றும் வரி தகவல் அறிக்கை (TIS) போன்ற ஆவணங்களை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் பகிர்ந்து கொண்டனர். "வரி தாக்கல் செய்யும் போர்டல் சர்வரின் செயல்பாட்டினால் ஏற்படும் தாமதம் காரணமாக பல வாடிக்கையாளர்களுக்கு AIS மற்றும் TIS ஐ அணுகுவதில் சிரமத்தை எதிர்கொள்கிறோம்" என்று அகமதாபாத்தை தளமாகக் கொண்ட CA ராஜு ஷா கூறியதாக லைவ்மின்ட் தெரிவிக்கிறது. வரி செலுத்துவோருக்கு ஐடிஆர் தாக்கல் செய்வதில் "பாதகமான" தாமதத்திற்கு போர்ட்டலில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகள் ஒரு காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.