பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள்: நுகர்வோர் பொருட்கள், ரியல் எஸ்டேட் ஆகியவை முக்கியத்துவம் பெறும் என கணிப்பு
செய்தி முன்னோட்டம்
லோக்சபா தேர்தல் முடிவைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் மூன்றாவது முறையாக நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
வரும் ஜூலை 23 ஆம் தேதி அவரது பட்ஜெட் உரை இருக்கும்.
அந்த பட்ஜெட்டின் மீது பலரின் கண்கள் ஆவலுடன் இருக்கும் நேரத்தில், குறிப்பிட்ட சில துறைகளுக்கு சலுகைகள் கிடைக்கக்கூடும் என கணிப்பட்டுள்ளது.
அதேபோல் தனிநபர் வரிகள் குறைக்கப்படுமா அல்லது NDA அரசாங்கம் நுகர்வோரை மையமாகக் கொண்ட துறைகளுக்கான செலவினங்களை அதிகரிக்குமா என்பது பற்றிய ஊகங்கள் நிறைந்துள்ளன.
துறைகள்
2024 பட்ஜெட்டில் இருந்து பலனடையக்கூடிய துறைகள்
தரகு நிறுவனங்களின் கூற்றுப்படி, நுகர்வோர் பொருட்கள், ரியல் எஸ்டேட், வீட்டு நிதி, உள்கட்டமைப்பு மற்றும் ஆட்டோமொபைல் போன்ற தொழில்கள் நுகர்வு அதிகரிப்பால் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டிய அறிக்கையின்படி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டிவிஎஸ் மோட்டார் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் போன்ற நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில், நுகர்வை அதிகரிக்க, கிராமப்புற திட்டங்களுக்கு அரசாங்கம் அதிக நிதியை ஒதுக்க வாய்ப்புள்ளது.
உள்ளூர் உற்பத்தி மற்றும் வேலை உருவாக்கத்தைத் தூண்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டங்களின் தொடர்ச்சியை HSBC எதிர்பார்க்கிறது.
புகையிலை வரிகளில் 5-7%க்கும் குறைவான அதிகரிப்பு நாட்டின் மிகப்பெரிய சிகரெட் தயாரிப்பாளரான ஐடிசி போன்ற நுகர்வோர் நிறுவனங்களுக்கு சாதகமாக பாதிக்கும் என்று ஜெஃப்ரிஸ் குறிப்பிட்டது.
ரியல் எஸ்டேட்
வீட்டு வசதிக்கான வட்டி மானியத்திட்டம்
மலிவு விலை வீடுகளுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிப்பது மேக்ரோடெக் டெவலப்பர்கள் மற்றும் சன்டெக் ரியாலிட்டி போன்ற டெவலப்பர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் சிட்டியின் அறிக்கை குறிப்பிடுகிறது.
நகர்ப்புற வீட்டுவசதிக்கான வட்டி மானியத் திட்டம் ஆவாஸ் பைனான்சியர்ஸ் மற்றும் ஹோம் ஃபர்ஸ்ட் ஃபைனான்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
மின்சார வாகனம்
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட EVக்கான மானியங்கள் நீட்டிக்கப்படக்கூடும்
மின்சார வாகனங்களை (EVs) உற்பத்தியை ஊக்குவிக்க இந்தியா ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 11,500 கோடி ரூபாய் மானியங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ், ஓலா எலக்ட்ரிக், ஆலெக்ட்ரா கிரீன்டெக் மற்றும் ஜேபிஎம் ஆட்டோ உள்ளிட்ட EV துறையில் உள்ள முக்கிய நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில், தற்போது இந்த மானியங்களின் அளவு மற்றும் கால அளவு இரண்டையும் அரசாங்கம் பராமரிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மறுபுறம், EV மானியங்கள் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தால், அது முழு மின்சார மாடல்களை விட ஹைபிரிட் வாகனங்களில் கவனம் செலுத்திய மாருதி சுசுகிக்கு பயனளிக்கும்.