LOADING...
எஸ்பிஐயின் மோசடி வகைப்பாட்டை எதிர்த்த அனில் அம்பானியின் மனுவை தள்ளுபடி செய்தது மும்பை உயர் நீதிமன்றம்
எஸ்பிஐயின் மோசடி வகைப்பாட்டை எதிர்த்த அனில் அம்பானியின் மனு தள்ளுபடி

எஸ்பிஐயின் மோசடி வகைப்பாட்டை எதிர்த்த அனில் அம்பானியின் மனுவை தள்ளுபடி செய்தது மும்பை உயர் நீதிமன்றம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 03, 2025
07:08 pm

செய்தி முன்னோட்டம்

தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) கணக்குகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மோசடியாளர் என வகைப்படுத்தியதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மும்பை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் ரேவதி மோகிதே டேரே மற்றும் நீலா கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு, அனில் அம்பானியின் மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பளித்தது. வழங்கப்பட்ட கடன்களின் விதிமுறைகளை மீறிச் செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டி, எஸ்பிஐ கடந்த ஆண்டு இந்தக் கணக்குகளை மோசடி என்று அறிவித்தது.

விசாரணை வாய்ப்பு

விசாரணை வாய்ப்பு வழங்கப்படவில்லை என வாதம்

இந்த வகைப்பாட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை நாடிய அனில் அம்பானி, வங்கியில் தனது தரப்புக்கு முறையாக விசாரணை வாய்ப்பு (Hearing) வழங்கப்படவில்லை என்றும், இது இயற்கை நீதிக் கொள்கைகளை மீறுவதாகவும் வாதிட்டார். மோசடி வகைப்பாட்டிற்கு அடிப்படையாக இருந்த முக்கிய ஆவணங்கள் ஆறு மாதங்களுக்குப் பின்னரே தமக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். எஸ்பிஐயின் இந்த வகைப்பாட்டிற்குப் பிறகு, வங்கி இந்த ஆண்டு மத்திய புலனாய்வுப் பிரிவில் (சிபிஐ) முறையான புகார் அளித்தது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அனில் அம்பானியால் சுமார் ₹2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டதாக எஸ்பிஐ புகார் அளித்ததைத் தொடர்ந்து சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதுடன், அம்பானியின் வீடு மற்றும் நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் சோதனைகளும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.