5 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு; 17,000 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது போயிங் நிறுவனம்
அதிகரித்து வரும் நிதி இழப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் 17,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. இது அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10% பேராகும். போயிங் நிறுவனம் மிக மோசமான கட்டத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. முன்னதாக, போயிங் சமீபத்தில் அதன் மூன்றாம் காலாண்டு வருவாயில் $5 பில்லியன் இழப்பைப் பதிவுசெய்தது மற்றும் அதன் 777எக்ஸ் ஜெட் விமானத்தின் முதல் விநியோகத்தை மற்றொரு வருடம் தாமதப்படுத்தியது. 33,000 அமெரிக்க வெஸ்ட்கோஸ்ட் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் உற்பத்தி நிறுத்தத்திற்குப் பிறகு போயிங் தனது நிதி யதார்த்தத்துடன் ஒத்துப்போகவும், அதன் முன்னுரிமைகளை மீண்டும் மையப்படுத்தவும் பணிநீக்கங்கள் அவசியம் என்று நிறுவனத்தின் சிஇஓ கெல்லி ஆர்ட்பெர்க் கூறியுள்ளார்.
ஆட்குறைப்பால் பாதிக்கப்படும் ஊழியர்கள்
போயிங் நிறுவனத்தின் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் மேல்மட்ட நிர்வாகிகள், மேலாளர்கள் மற்றும் கீழ்மட்ட பணியாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், போயிங் அதன் பாதுகாப்பு மற்றும் வணிக விமானத் திட்டங்களில் சவால்களை எதிர்கொள்வதோடு, நிதி ரீதியாகவும் சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை நிறுவனத்தை மீட்பதற்கான அவசிய தேவையாகவே கருதப்படுகிறது. இதற்கிடையே, நிறுவனத்தின் ஆட்குறைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து, சந்தைக்குப் பிந்தைய வர்த்தகத்தில் நிறுவனத்தின் பங்குகள் 1.1% சரிந்தன. இதற்கிடையே, போயிங் அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் நிறுவனத்திடம் இருந்து விசாரணையை எதிர்கொண்டது. ஆய்வாளர்கள், போயிங் தனது கடன் மதிப்பீட்டை பராமரிக்க $10 பில்லியன் முதல் $15 பில்லியன் வரை திரட்ட வேண்டும் என்று கணித்துள்ளனர். இது தற்போது தரமிறக்கப்படும் அபாயத்தில் உள்ளது.