தங்கத்தின் விலை உயர்வால் வெள்ளிக்கு மவுசு! ஹால்மார்க் சோதனையைத் தீவிரப்படுத்தும் BIS; முழு பின்னணி
செய்தி முன்னோட்டம்
தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வரும் சூழலில், மக்கள் பலரும் வெள்ளி நகைகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, வெள்ளி நகைகளின் தரத்தைப் பரிசோதிக்கும் கட்டமைப்பை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) ஆயத்தமாகி வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் வெள்ளி நகைகளுக்கான சோதனைக் கூடங்கள் மற்றும் மதிப்பீட்டு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என BIS துணை இயக்குநர் ஜெனரல் நிஷாத் எஸ் ஹேக் தெரிவித்துள்ளார்.
தேவை அதிகரிப்பு
HUID அறிமுகமும் அதிகரித்த தேவைகளும்
வெள்ளி நகைகளுக்கான ஹால்மார்க் முறை 2005 முதல் விருப்பத்தின் பேரில் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், செப்டம்பர் 2025 முதல் ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் (HUID) கட்டாயமாக்கப்பட்டது.
இதன் மூலம் வாங்குபவர்கள் வெள்ளியின் தூய்மையை சுலபமாக சரிபார்க்க முடியும்.
2024-25 நிதியாண்டில் 3.2 மில்லியனாக இருந்த ஹால்மார்க் செய்யப்பட்ட வெள்ளி நகைகளின் எண்ணிக்கை, 2025-26 நிதியாண்டில் 5.9 மில்லியனாக கணிசமாக உயர்ந்துள்ளது.
தற்போது இதற்காக 230 அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஹால்மார்க் சோதனை
தங்க ஹால்மார்க் சோதனையில் காக்கப்படும் ரகசியம்
தங்க நகைகளின் சந்தைக் கண்காணிப்புச் சோதனைகளை வெளிப்புற ஆய்வுக்கூடங்களுக்கு வழங்காமல், BIS தனது சொந்த ஆய்வகங்கள் மூலமே நேரடியாக நடத்தி வருகிறது.
மக்களின் நம்பிக்கையை வென்றதில் இது மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
கடந்த 2014ல் 147 ஆக இருந்த அங்கீகரிக்கப்பட்ட சோதனைக் கூடங்களின் எண்ணிக்கை, தற்போது 440 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 2.7 லட்சம் தயாரிப்பு மாதிரிகள் இந்த ஆய்வகங்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்பம்
ஏஐ மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்களின் பயன்பாடு
தரப் பரிசோதனைகளை அதிவேகமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடத்த செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்களை பிஐஎஸ் சோதனை முறையில் பயன்படுத்தி வருகிறது.
சிமெண்ட் சோதனைகளுக்காக ரோபோடிக் கரங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், சோதனைத் தகவல்கள் தானாகவே ஆய்வகத் தகவல் மேலாண்மை அமைப்பில் பதிவாகும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பிஐஎஸ் கேர் (BIS Care) செயலி மூலம் புகார்களைப் பதிவு செய்து பலன் பெறலாம்.