ஆப்பிள் சகாப்தத்தில் மாற்றம்: டிம் குக் விலகலை தொடர்ந்து ஜான் டெர்னஸ் புதிய CEO-வாக நியமனம்
செய்தி முன்னோட்டம்
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவனான ஆப்பிள், தனது நீண்டகால நிர்வாகியான ஜான் டெர்னஸ் என்பவரை நிறுவனத்தின் அடுத்த தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) இன்று அறிவித்துள்ளது. 2011-ம் ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனத்தை வழிநடத்தி வந்த டிம் குக், இப்பொறுப்பிலிருந்து விலகி நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக பொறுப்பேற்கிறார். இந்த அறிவிப்புடன் ஜோனி ஸ்ரூஜி ஆப்பிளின் சீஃப் ஹார்டுவேர் ஆபீசராகவும், ஜான் டெர்னஸ் கவனித்து வந்த ஹார்டுவேர் இன்ஜினியரிங் பிரிவின் புதிய தலைவராக டாம் மெரிப்பும் பொறுப்பேற்கின்றனர். டிம் குக்கின் 13 ஆண்டுகால தலைமையில் ஆப்பிள் பங்குகள் சுமார் 20 மடங்கு உயர்ந்தது ஒரு மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இப்போது ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிள் ஒரு புதிய 'ஏஐ' சகாப்தத்திற்குள் நுழைகிறது.
விவரங்கள்
யார் இந்த ஜான் டெர்னஸ்?
50 வயதான ஜான் டெர்னஸ், 2001-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்தார். மேக், ஐபேட் மற்றும் ஏர்பாட்ஸ் போன்ற ஆப்பிளின் முதன்மை தயாரிப்புகளின் வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றியவர். ஆப்பிளின் ஹார்டுவேர் இன்ஜினியரிங் பிரிவின் தலைவராக இருந்து, மேக் கணினிகளின் விற்பனையை மீண்டும் உச்சத்திற்குக் கொண்டு சென்ற பெருமை இவருக்கு உண்டு. டிம் குக் விநியோகச் சங்கிலி மற்றும் நிர்வாகத்தில் கவனம் செலுத்திய நிலையில், ஜான் டெர்னஸ் தயாரிப்பு கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர்.
எதிர்கால திட்டங்கள்
ஆப்பிளின் சவால்களும் எதிர்காலத் திட்டங்களும்
ஜான் டெர்னஸின் நியமனம், ஆப்பிள் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஹார்டுவேர் புதுமைகளை நோக்கித் திரும்புவதைக் காட்டுகிறது. என்விடியா (Nvidia) மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்களின் கடும் போட்டிக்கு மத்தியில், ஐபோன் மற்றும் பிற சாதனங்களில் AI-ஐ ஆழமாகப் புகுத்தும் பொறுப்பு இவரிடம் உள்ளது. மடிக்கக்கூடிய சாதனங்கள் (Foldable devices), ஸ்மார்ட் கிளாஸ்கள் மற்றும் AI மூலம் இயங்கும் அணியக்கூடிய சாதனங்களை (Wearables) அறிமுகப்படுத்துவதில் இவர் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் கூகுளின் 'ஜெமினி', மாடலை Siri-யில் இணைக்க ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.