அமேசான் நிறுவனத்தில் இரண்டாம் கட்டப் பணிநீக்கம்: 16,000 ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்களா?
செய்தி முன்னோட்டம்
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் (Amazon), தனது நிறுவன கட்டமைப்பை சீரமைக்கும் நோக்கில் அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய அளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கவுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் வெளியான தகவல்களின்படி, மொத்தம் 30,000 வேலைவாய்ப்புகளை பறிக்கத் திட்டமிட்டுள்ள அமேசான், அதன் இரண்டாம் கட்டமாக சுமார் 16,000 ஊழியர்களை ஜனவரி 27 முதல் நீக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முறை பணிநீக்கம் செய்யப்படுபவர்களில் பெரும்பாலானோர் உயர் பதவிகளில் இருக்கும் கார்ப்பரேட் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் தனது HR, பணியாளர் தேர்வு மற்றும் நிர்வாகப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் Automation கருவிகளை புகுத்த தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, நிர்வாக ரீதியான பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் தேவை குறைந்துள்ளதாக நிறுவனம் கருதுகிறது.
பாதிப்பு
WARN நோட்டீஸ்களை பெற்ற ஊழியர்கள்
அமேசானின் லாபகரமான பிரிவான AWS மற்றும் அதன் PXT - People Experience and Technology பிரிவு ஆகியவை இந்த ஆட்குறைப்பால் அதிகம் பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அமேசான் CEO ஆண்டி ஜாஸி, நிறுவனத்தில் மேலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து, முடிவெடுக்கும் வேகத்தை அதிகரிக்க விரும்புவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். அமெரிக்கச் சட்டப்படி, பாரிய பணிநீக்கங்களுக்கு முன்னதாக வழங்கப்படும் 'வார்ன்' (WARN) நோட்டீஸ்கள் ஏற்கனவே சில ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டப்படி பெரிய அளவில் பணிநீக்கத்திற்கு 60 நாட்கள் முன்னதாக ஊழியர்களுக்கு WARN நோட்டீஸ் அனுப்பிட வேண்டும். அதையும் சில ஊழியர்கள் பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மட்டுமின்றி, இந்தியாவிலும் உள்ள அமேசான் ஊழியர்களிடையே இந்தச் செய்தி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.