Amazon நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு: சாதனங்கள் தயாரிப்புப் பிரிவில் 250 ஊழியர்கள் பணிநீக்கம்
செய்தி முன்னோட்டம்
உலகப் புகழ்பெற்ற இ-காமெர்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், தனது சாதனங்கள் தயாரிப்புப் பிரிவில் மேற்கொண்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 250 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. Kindle இ-ரீடர்கள் மற்றும் Echo ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் போன்ற தயாரிப்புகளுக்கு பொறுப்பான சாதனங்கள் பிரிவிலேயே இந்த வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது பிரதானமாக மென்பொருள் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டிருக்கும் பணியாளர்களைப் பாதித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அமேசான் துணைத் தலைவர் செரி ராபின்சன் அனுப்பிய மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலமாக அதிகாலையிலேயே இந்நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா மற்றும் ஆரக்கிள் போன்ற நிறுவனங்களைப் போலவே அமேசானும் இம்முறையைக் கையாண்டுள்ளது.
காரணம்
பணிநீக்கத்திற்கான காரணம் என்ன?
நிறுவனத்தின் செயல்பாடுகளை மேலும் திறம்படச் செய்யவும், எதிர்காலத் தயாரிப்பு வரைபடத்துடன் தன்னை இணைத்துக் கொள்ளவுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனம் நடப்பாண்டில் மட்டும் செயற்கை நுண்ணறிவில் தோராயமாக 220 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இவ்வருடத்தின் தொடக்கத்தில் கோர் ரிட்டெய்ல் பிரிவில் 1,000 பேரை பணிநீக்கம் செய்த அமேசான், தற்போது ஏஐ தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருவதால் தொடர் ஆட்குறைப்புகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டில் மட்டும் உலகளவில் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்களில் 1,35,000-த்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.