ஆப்பிளை முந்தியது Alphabet! உலகப் பணக்கார நிறுவனங்கள் பட்டியலில் கூகுள் நிறுவனத்தின் அதிரடி பாய்ச்சல்!
செய்தி முன்னோட்டம்
சர்வதேச பங்குச்சந்தையில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியில், கூகுளின் தாய் நிறுவனமான 'ஆல்பாபெட்' (Alphabet), ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உலகின் இரண்டாவது மிக மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது. சமீபத்திய வர்த்தக முடிவுகளின்படி, ஆல்பாபெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.88 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஆல்பாபெட்டின் 'கிளாஸ் ஏ' (Class A) பங்குகள் 2.45% உயர்ந்து 322.04 டாலராக நிலைபெற்றது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு சுமார் 64.73% லாபத்தை ஈட்டித் தந்துள்ளது. மறுபுறம், நீண்டகாலமாக முதலிடத்தில் இருந்த ஆப்பிள் நிறுவனம் (Apple), தற்போது 3.84 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஓராண்டில் 7.49% மட்டுமே வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
வளர்ச்சிக்கு காரணம்
ஆல்பாபெட்டின் வளர்ச்சிக்கு காரணமான AI மற்றும் வேமோ
ஆல்பாபெட் நிறுவனத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு அதன் 'ஜெமினி' (Gemini) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. ஜெமினி ஏஐ தளத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகள் பயனர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், ஆல்பாபெட் நிறுவனத்திற்குச் சொந்தமான 'வேமோ' (Waymo) ரோபோடாக்சி (Robotaxi) சேவை, அமெரிக்காவின் ஃபீனிக்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற முக்கிய நகரங்களில் வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்று வருவதும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
முதலிடம்
முதலிடத்தில் NVIDIA
இப்பட்டியலில் என்விடியா (NVIDIA) நிறுவனம் 4.59 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. செயற்கை நுண்ணறிவுப் புரட்சிக்குத் தேவையான சிப்கள் மற்றும் ஜிபியு-க்களுக்கான (GPUs) தேவை உலகளவில் அதிகரித்துள்ளதே என்விடியாவின் இந்த அசைக்க முடியாத வெற்றிக்குக் காரணமாகும். தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுத் துறையே உலகப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.