ஜூன் முதல் ஆகஸ்ட் வரை ஏர் இந்தியா வெளிநாட்டு விமானங்கள் ரத்து? முழு பட்டியல் இதோ!
செய்தி முன்னோட்டம்
ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் "வெளிநாட்டுப் பயணத் தவிர்ப்பு" வேண்டுகோள் ஆகியவற்றைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் தனது சர்வதேச விமான சேவைகளை கணிசமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்த மாற்றங்கள் அமலில் இருக்கும். ஏர் இந்தியா நிறுவனம் குறுகிய கால மற்றும் நீண்ட தூர சர்வதேச விமானச் சேவைகளைக் குறைத்துள்ளது. பழைய போயிங் 777 விமானங்களை நிறுத்திவிட்டு, புதிய ஏ350 (A350) மற்றும் எக்ஸ்-எதிஹாட் 777 விமானங்களை முக்கியமான பாதைகளில் மட்டும் இயக்கத் திட்டமிட்டுள்ளது.
முக்கிய ரத்துக்கள்
எந்தெந்த நகரங்களுக்கு பாதிப்பு?
சிங்கப்பூர்: சென்னை மற்றும் மும்பையிலிருந்து நாள்தோறும் இயக்கப்படும் இரண்டு விமானங்களும் ரத்து. டெல்லியிலிருந்து வாரத்திற்கு 4 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும். பாங்காக்: டெல்லியிலிருந்து தினசரி 4 விமானங்கள் 3 ஆகக் குறைப்பு; மும்பையிலிருந்து வாரத்திற்கு 6 விமானங்கள் ரத்து. காத்மாண்டு: தினசரி 6 விமானங்கள் 4 ஆகக் குறைப்பு. கோலாலம்பூர்: வாரத்திற்கு 10 விமானங்கள் 5 ஆகக் குறைப்பு. மாலத்தீவு: டெல்லியிலிருந்து இயக்கப்படும் சேவை தற்காலிகமாக நிறுத்தம். டாக்கா &கொழும்பு: மும்பையிலிருந்து இயக்கப்படும் சேவைகள் குறைப்பு. வியன்னா, கோபன்ஹேகன், ரோம், சூரிச்: வாரத்திற்கு 4 முறை இயக்கப்படும் விமானங்கள் 3 ஆகக் குறைப்பு. பாரிஸ்: தினசரி 2 விமானங்கள் 1 ஆகக் குறைப்பு. மிலன்: வாரத்திற்கு 5 விமானங்கள் 4 ஆகக் குறைப்பு.
அமெரிக்கா
வட அமெரிக்கா (அமெரிக்கா & கனடா)
சிகாகோ: ஜூன் முதல் அக்டோபர் வரை விமானச் சேவைகள் நிறுத்தம். நெவார்க்: டெல்லியிலிருந்து ஜூன் - ஆகஸ்ட் வரை நிறுத்தம். நியூயார்க்: மும்பையிலிருந்து ஜூன் - ஆகஸ்ட் வரை நிறுத்தம். சான் பிரான்சிஸ்கோ, டொராண்டோ, வான்கூவர்: ஆகஸ்ட் வரை விமானங்களின் எண்ணிக்கை குறைப்பு. ஆஸ்திரேலியா: ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வாரத்திற்கு 5 முறை இயக்கப்படும் விமானங்கள் 4 ஆகக் குறைப்பு.
காரணம்
விமானப் போக்குவரத்து முடக்கத்திற்கு என்ன காரணம்?
கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளதால், சர்வதேச விமானங்களை இயக்குவதற்கான செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதால், விமானப் பயணங்களுக்கான முன்பதிவு குறைந்துள்ளது. பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், வட அமெரிக்கா செல்லும் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக வழியில் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது. கடந்த நிதியாண்டில் ₹20,000 கோடிக்கும் மேல் நஷ்டத்தைச் சந்தித்த ஏர் இந்தியா, இந்த புதிய பொருளாதாரச் சூழலில் நஷ்டத்தைத் தவிர்க்கவே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.