அமெரிக்காவின் லஞ்ச குற்றச்சாட்டு எதிரொலி; 600 மில்லியன் டாலர் பத்திர விற்பனையை ரத்து செய்தது அதானி குழுமம்
நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி உட்பட அதன் நிர்வாகிகள் மீதான லஞ்சப் புகாரைத் தொடர்ந்து அதானி குழுமம் 600 மில்லியன் டாலர் பத்திரத்தை அமெரிக்காவில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜஸ்டிஸ் (DOJ) மற்றும் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (SEC) ஆகியவை, இந்தியாவில் சூரிய சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு $250 மில்லியன் லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை நிறுவனம் திட்டமிட்டதாக குற்றம் சாட்டின. பத்திர விலை நிர்ணயத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட சட்ட முன்னேற்றங்கள், ஆசிய சந்தைகளில் அதானியின் அமெரிக்க டாலர் பத்திரங்களில் கூர்மையான சரிவுக்கு வழிவகுத்தது. சில பத்திரங்கள் 15 சென்ட்கள் வரை குறைந்தன.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் விபரம்
சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், நிதி திரட்டும் போது அமெரிக்க முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதானி குழுமம், ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையின் கீழ், பங்குக் கையாளுதல் மற்றும் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இப்போது தீவிரமான நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறை சவால்களை எதிர்கொள்கிறது. இதற்கிடையே, அதானி கிரீன் எனர்ஜி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. எனினும், அதானி குழுமத்தின் பங்குகள் இந்த அறிக்கையால் சரிவை சந்தித்தது. அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 18% சரிந்தன. நிறுவனம் முந்தைய குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்தாலும், இந்த புதிய குற்றச்சாட்டுகள் ஆளுமை மற்றும் நிதி ஸ்திரத்தன்மை குறித்த முதலீட்டாளர்களின் கவலைகளை அதிகப்படுத்தியுள்ளது.