Loading...
8வது ஊதியக் குழு சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய மாற்றம் எப்போது அமலாகும்? புதிய அப்டேட்
8வது ஊதியக் குழு

8வது ஊதியக் குழு சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய மாற்றம் எப்போது அமலாகும்? புதிய அப்டேட்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 09, 2026
01:57 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்டகால எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழுவின் செயல்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 2025 நவம்பர் 3 அன்று அமைக்கப்பட்ட இந்த குழுவிற்கு தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஊதியக் குழு தனது இறுதி அறிக்கையை 2027 மே மாதத்திற்குள் மத்திய அரசிடம் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த காலக்கெடுவிற்குள் முழுமையான ஆலோசனைகளை முடிப்பது மிக அவசியமாகும்.

தயார் நிலை

இடைக்கால அறிக்கைகள் மற்றும் ஆலோசனைகளின் தற்போதைய நிலை

ஊதியக் குழுவின் வரைமுறைகளின்படி, இறுதி அறிக்கைக்கு முன்னதாக சேவை நிபந்தனைகள் மற்றும் படிகள் தொடர்பாக இடைக்கால அறிக்கைகளை சமர்ப்பிக்கும் வாய்ப்பும் இந்த குழுவிற்கு உள்ளது.

தற்சமயம் ஊழியர் சங்கங்கள், ஓய்வூதிய அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை ஆய்வு செய்யும் பணிகளுடன், நாடு தழுவிய அளவிலான ஆலோசனைக் கூட்டங்களையும் ஊதியக் குழு நடத்தி வருகிறது.

இத்தகைய விரிவான ஆய்வுகள் காரணமாகக் கூடுதல் அவகாசம் தேவைப்பட்டால் காலக்கெடுவை நீட்டிக்கவும் வாய்ப்புகள் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

ஊதிய மாற்றம்

புதிய ஊதிய மாற்றம் எப்போது முதல் நடைமுறைக்கு வரும்?

அறிக்கை 2027 மே மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டாலும், அதை மத்திய அரசு உடனடியாகக் கணக்கில் அமல்படுத்த இயலாது.

மத்திய அமைச்சரவை அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்து, நிதி ஒதுக்கீடுகளுக்கு ஏற்ப பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட பிறகே இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்படும்.

இருப்பினும், முந்தைய ஊதியக் குழுக்களின் வழக்கமான 10 ஆண்டு சுழற்சி முறையின்படி, புதிய ஊதிய மாற்றம் 2026 ஜனவரி 1 முதலே கணக்கிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

நிலுவைத் தொகை

நிலுவைத் தொகை மற்றும் ஊழியர்களுக்கான பலன்கள்

அரசு இந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்த 2027 அல்லது 2028 வரை ஆகலாம் என்பதால், 2026 ஜனவரி 1 முதல் கணக்கிடப்படும் இடைப்பட்ட காலத்திற்கான நிலுவைத் தொகையை ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் மொத்தமாகப் பெறுவார்கள்.

பிட்மென்ட் ஃபேக்டர், அடிப்படை சம்பள உயர்வு மற்றும் அகவிலைப்படி இணைப்பு குறித்த இறுதி விவரங்கள் அரசு முறையான அறிவிப்பை வெளியிடும்போதே தெளிவாகத் தெரியும்.

இதனால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ முடிவிற்காகக் காத்திருக்கின்றனர்.

ADVERTISEMENT