8வது ஊதியக் குழு: புதிய நிதிச் சட்டம் 2025இன் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்படுமா? அரசு விளக்கம்
செய்தி முன்னோட்டம்
8வது ஊதியக் குழு தொடர்பானப் பேச்சுக்கள் மற்றும் புதிய நிதிச் சட்டம் 2025 குறித்த வதந்திகளுக்கு மத்தியில், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வுகள் நிறுத்தப்படுமா என்பது குறித்து இந்திய அரசு அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. சமூக ஊடகங்களில், குறிப்பாக வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி பரவி வந்தது. அதில், புதிய நிதிச் சட்டம் 2025 இன் கீழ், மத்திய அரசு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் ஊதியக் குழு திருத்தங்கள் போன்ற ஓய்வுக்குப் பிந்தைய பலன்களைத் திரும்பப் பெற்றுவிட்டது என்று கூறப்பட்டிருந்தது. இந்தச் செய்தி போலியானது என்று PIB உண்மைச் சரிபார்ப்பு மூலம் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விளக்கம்
அரசு விளக்கம்
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் ஊதியக் குழு திருத்தங்கள் போன்றப் பலன்கள் தொடர்ந்து கிடைக்கும் என்றும், ஒழுங்கீனமான நடத்தைக்காகப் பணியிலிருந்து நீக்கப்பட்டால் மட்டுமே ஓய்வூதியப் பலன்கள் நிறுத்தப்படும் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, "CCS (Pension) Rules, 2021இன் விதி 37, பொதுத்துறை நிறுவனத்தில் உள்வாங்கப்பட்ட ஊழியர் ஒழுங்கீனமான நடத்தைக்காகப் பணி நீக்கம் செய்யப்பட்டால், அவர்களின் ஓய்வூதியப் பலன்கள் பறிமுதல் செய்யப்படும்" என்று திருத்தப்பட்டுள்ளது. பொது நலன் சார்ந்த இத்தகைய வதந்திகள் மற்றும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், அரசு உறுதிப்படுத்தும் வரை மக்கள் காத்திருக்க வேண்டும் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.