LOADING...
8வது ஊதியக் குழு நடைமுறை தாமதம் என தகவல்; வங்கி ஊழியர்களுக்குப் பலன் கிடைக்குமா?
8வது ஊதியக் குழு நடைமுறை தாமதம் என தகவல்

8வது ஊதியக் குழு நடைமுறை தாமதம் என தகவல்; வங்கி ஊழியர்களுக்குப் பலன் கிடைக்குமா?

எழுதியவர் Sekar Chinnappan
Aug 24, 2025
09:48 am

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்காக எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக் குழு (8th Pay Commission) நடைமுறைக்கு வருவது தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரியில் இந்தக் குழுவை அமைக்க ஒப்புதல் அளித்திருந்தாலும், இதுவரை தலைவர் அல்லது உறுப்பினர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்த தாமதம் காரணமாக, 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர வேண்டிய ஊதியக் குழு, உண்மையில் 2028ஆம் ஆண்டுக்குத் தள்ளப்படலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்தக் குழுவின் அறிவிப்புக்காகக் காத்திருக்கும் நிலையில், அதன் செயல்பாடுகள் தாமதமாவது குறித்து மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி சமீபத்தில் விளக்கம் அளித்தார்.

ஆலோசனை

ஊதியக் குழுவின் விதிமுறைகள் குறித்து ஆலோசனை

ஊதியக் குழுவின் விதிமுறைகள் (Terms of References) குறித்துப் பாதுகாப்புத் துறை, உள்துறை, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை உட்பட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்களிடமிருந்து ஆலோசனைகள் இன்னும் பெறப்பட்டு வருவதால், அறிவிப்பு நிலுவையில் உள்ளது என்று அவர் கூறினார். அனைத்து உள்ளீடுகளும் பெறப்பட்ட பின்னரே அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், அதன்பிறகே தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

வங்கி ஊழியர்கள்

அரசு வங்கி ஊழியர்களுக்கும் 8வது ஊதியக்குழு பொருந்துமா?

இதற்கிடையே, 8வது ஊதியக் குழு மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அரசு வங்கி ஊழியர்களுக்கு இந்த ஊதியக் குழு பொருந்தாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், வங்கி ஊழியர்களின் சம்பளம் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) உடன் ஏற்படும் ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே திருத்தப்படுகிறது. எனவே, அரசு வங்கி ஊழியர்கள் ஊதியக் குழுவின் வரம்புக்குள் வர மாட்டார்கள்.