8வது ஊதியக் குழு: அதிக ஃபிட்மென்ட் ஃபாக்டரா அல்லது 7% ஆண்டு ஊதிய உயர்வா? ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்க நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட 8வது ஊதியக் குழு தனது ஓராண்டு காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. முன்னதாக 6வது மற்றும் 7வது ஊதியக் குழுக்களில் முறையே 1.86 மற்றும் 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரும், 3 சதவீத ஆண்டு ஊதிய உயர்வும் வழங்கப்பட்டன. தற்போது NC-JCM, AIDEF மற்றும் AINPSEF உள்ளிட்ட முக்கிய ஊழியர் சங்கங்கள் குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ₹18,000-லிருந்து ₹69,000 ஆக உயர்த்த 3.833 ஃபிட்மென்ட் ஃபாக்டரையும், 7 சதவீதம் வரை ஆண்டு ஊதிய உயர்வையும் வலியுறுத்துகின்றன.
10 ஆண்டு ஒப்பீடு
அதிக ஃபிட்மென்ட் ஃபாக்டரா அல்லது 7% ஆண்டு ஊதிய உயர்வா?
புதிய ஊதியக் குழுவில் ஆரம்ப அடிப்படை சம்பளம் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வு ஆகிய இரண்டு முக்கியக் காரணிகளும் ஊழியர்களின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன.
உதாரணமாக பே லெவல் 5 (₹29,200) ஊழியருக்கு 2.57 ஃபிட்மென்ட் மற்றும் 3 சதவீத உயர்வு கிடைத்தால் 10 ஆண்டுகளில் அடிப்படை சம்பளம் ₹97,915 ஆக உயரும்.
ஆனால் 2.1 ஃபிட்மென்ட் உடன் 7 சதவீத ஆண்டு ஊதிய உயர்வு கிடைத்தால், முதல் ஆண்டில் ₹61,320 ஆக இருந்தாலும் 10-வது ஆண்டில் ₹1,12,734 ஆக அதிகரித்து அதிக லாபம் தரும்.
ஊதிய வளர்ச்சி
பே லெவல் 6 மற்றும் 7 ஊழியர்களுக்கு கிடைக்கும் ஊதிய வளர்ச்சி
இதேபோல் பே லெவல் 6 (₹35,400) ஊழியர்களுக்கு 2.57 ஃபிட்மென்ட் மற்றும் 3 சதவீத உயர்வு முறையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ₹1,18,706 அடிப்படைச் சம்பளம் கிடைக்கும்.
மாறாக 2.1 ஃபிட்மென்ட் மற்றும் 7 சதவீத ஆண்டு ஊதிய உயர்வு முறையில் 10-வது ஆண்டில் அவர்களின் சம்பளம் ₹1,36,671 ஆக உயரும்.
மேலும் பே லெவல் 7 (₹44,900) ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 2.57 ஃபிட்மென்ட் மற்றும் 7 சதவீத ஆண்டு ஊதிய உயர்வு இணைந்தால், 10 ஆண்டுகளில் ₹2,12,145 என்ற மிகப்பெரிய உச்சத்தைத் தொடும்.
ஊதிய இரட்டிப்பு
7 ஆண்டுகளில் இரட்டிப்பு சம்பளமும் 2027 இறுதி அறிக்கை எதிர்பார்ப்பும்
ஆண்டு ஊதிய உயர்வை 7 சதவீதமாக அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த சம்பளம் 7 முதல் 8 ஆண்டுகளிலேயே இரட்டிப்பாகிவிடும் என AINPSEF அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படும் ஊதியக் குழுவை மட்டுமே ஊழியர்கள் நம்பியிருக்க வேண்டிய அவசியம் பெருமளவில் குறையும்.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட 8வது ஊதியக் குழு தனது இறுதிப் பரிந்துரை அறிக்கையை 2027 மே அல்லது ஜூன் மாதத்தில் சமர்ப்பித்த பிறகே மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.