உணவு டெலிவரி ஆப்ஸ்: 35% இந்திய உணவகங்கள் வெளியேற விரும்புவது ஏன்? ஒரு விரிவான ஆய்வு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் உணவுப் பொருளாதாரத்தில் உணவு டெலிவரி ஆப்ஸ் (Food Delivery Apps) பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டன. இருப்பினும், அண்மையில் 'தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில்' (NCAER) நடத்திய ஆய்வில், இந்த செயலிகளைப் பயன்படுத்தும் 35 சதவீத உணவகங்கள், வாய்ப்பு கிடைத்தால் அவற்றிலிருந்து வெளியேற விரும்புவதாகத் தெரிவித்துள்ளன. அதே சமயம், மூன்றில் இரண்டு பங்கு உணவகங்கள் இந்தச் சேவையைத் தொடரவே விரும்புகின்றன. இது உணவகங்களுக்கும் டெலிவரி நிறுவனங்களுக்கும் இடையிலான சிக்கலான உறவை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
காரணங்கள்
அதிருப்திக்கான முக்கிய காரணங்கள்
உணவகங்களின் அதிருப்திக்கு முதன்மையான காரணமாகக் கூறப்படுவது அதிகப்படியான 'கமிஷன்' கட்டணமாகும். 2019 ஆம் ஆண்டில் ஒரு ஆர்டருக்கு சராசரியாக 9.6 சதவீதமாக இருந்த கமிஷன், 2023 இல் 24.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் அதிக ஆர்டர்கள் வந்தாலும், உணவக உரிமையாளர்களுக்குக் கிடைக்கும் நிகர லாபம் மிகவும் குறைந்துவிடுகிறது. பெரிய உணவகங்கள் கமிஷன் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், சிறிய உணவகங்கள் இந்த நிதிச் சுமையைச் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. மேலும், மோசமான வாடிக்கையாளர் சேவை மற்றும் லாபமின்மை ஆகியவையும் வெளியேற விரும்புவதற்கான பிற காரணங்களாகும்.
தயக்கம்
வெளியேறத் தயங்குவது ஏன்?
கமிஷன் சுமை இருந்தபோதிலும், பெரும்பாலான உணவகங்கள் இந்த ஆப்ஸ்களைத் தொடர்வதற்கு 'விசிபிலிட்டி' (Visibility) மற்றும் பரந்த வாடிக்கையாளர் தளமே காரணமாகும். 59 சதவீத உணவகங்கள் இந்தச் செயலிகளால் தங்களின் புவியியல் எல்லை விரிவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. மேலும், 50 சதவீதத்திற்கும் அதிகமான உணவகங்கள் புதிய வாடிக்கையாளர்களை அடைய இது உதவுவதாகக் கூறியுள்ளன. குறிப்பாகப் புதிய மற்றும் சிறிய உணவகங்களுக்குச் சொந்தமாக டெலிவரி உள்கட்டமைப்பை உருவாக்குவது கடினம் என்பதால், அவர்கள் இந்தச் செயலிகளையே சார்ந்துள்ளனர். லாபம் குறைந்தாலும், ஒட்டுமொத்த வருவாயை நிலைநிறுத்த இந்தச் செயலிகள் அவசியம் என்பதே தற்போதைய யதார்த்தமாகும்.