இந்தியாவில் வெளியானது யமஹாவின் புதிய 'R3' மற்றும் 'MT-03' ப்ரீமியம் பைக் மாடல்கள்
இந்தாண்டு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு ப்ரீமியம் பைக் மாடல்களை இறுதியாக இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனம். BS-6 மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு விற்பனையில் இருந்த 'R3' மற்றும் இந்திய இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் மாடலாக இருக்கும் MT-15ன் பெரிய வெர்ஷனான 'MT-03' ஆகிய இரண்டு ப்ரீமியம் பைக்குகளை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது யமஹா. வெளியீட்டைத் தொடர்ந்து இந்த பைக்குகளுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த பைக்குகளின் டெலிவரிக்களை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் யமஹா நிறுவனம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த இரண்டு பைக்குகளையும் CBU முறையிலேயே இந்தியாவில் யமஹா விற்பனை செய்யத் திட்டமிட்டிருப்பதால் சற்று கூடுதல் விலையிலேயே இவை தற்போது வெளியாகியிருக்கின்றன.
யமஹா R3: வசதிகள் மற்றும் விலை
யமஹாவின் R லைன்அப்பில் உள்ளி பிற விலையுயர்ந்த பைக்குளின் டிசைனைப் போலவே R3-யின் டிசைனும் இருக்கிறது. யமஹா R சீரிஸின் ஆஸ்தான கருப்பு மற்றும் நீலம் ஆகிய இரண்டு நிறங்களில் புதிய R3 வெளியாகியிருக்கிறது. டூயல் LED முகப்பு விளக்குகள், ப்ளூடூத் கணெக்டிவிட்டியுடன் கூடிய LCD டிஸ்பிளே ஆகிய வசதிகளைக் கொண்டிருக்கிறது புதிய யமஹா R3. இந்த R3-யில், 40.4hp பவர் மற்றும் 29.4Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, 321சிசி பேரலல் ட்வின் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது யமஹா. மேலும், டூயல் சேனல் ABS மற்றும் அசிஸ்ட், ஸ்லிப்பர் கிளட்சுடன் கூடிய 6-ஸ்பீடு கியர்பாக்ஸூம் உண்டு. இந்தியாவில் ரூ.4.64 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது இந்தப் புதிய யமஹா R3.
யமஹா MT-03: வசதிகள் மற்றும் விலை
MT-15வைத் தொடர்ந்து, யமஹாவின் MT சீரிஸில் இரண்டாவது பைக்காக புதிதாக அறிமுகமாகியிருக்கிறது MT-03 மாடல். R3-யில் உள்ள ஸ்போர்ட்ஸ் பைக் டிசனைத் தூக்கிவிட்டு, நேக்கட் ஸ்ட்ரீட் பைட்டர் டிசனைக் கொடுத்தால் அது தான் MT-03. கிட்டத்தட்ட R3-யில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து வசதிகளும் இந்த MT-03யிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. R3 மாடலில் பயன்படுத்தப்பட்ட அதே இன்ஜினே இந்த MT-03 மாடலிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மாடலை சியான் ப்ளூ மற்றும் பிளாக் ஆகிய இரண்டு நிறங்களில் இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது யமஹா. இந்தியாவின் ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக் பிரிவில் முக்கியமாக இடத்தைப் பிடிக்கவிருக்கும் MT-03 மாடலை R3-யை விட ரூ.5,000 குறைவாக ரூ.4.59 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது யமஹா.