புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் திட்டத்திலிருந்து பின்வாங்கும் யமஹா
ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நியோ'ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவிற்கு ஏற்ற வகையில் மறுவடிவம் செய்து வெளியிட இருப்பதாக கடந்த வருடம் யமஹா நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், சென்ற வருடத்துடன் ஒப்பிடும்போது தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிகபட்ச மானியம் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கொடுக்கப்படும் மானியம் குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்தியாவில் அதிகபட்ச ரேஞ்சுடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போட்டியாளர்கள் வெளியிட்டு வருகிறார்கள். 100கிமீ-க்கு மேல் டிரைவிங் ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் நிறையவே விற்பனையில் இருக்கிறது. ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படும் யமஹாவின் நியோ'ஸ் ஸ்கூட்டரோ வெறும் 37கிமீ ரேஞ்சை மட்டுமே கொண்டிருக்கிறது. இந்தியாவில் போட்டியிடும் அளவுற்கு யமஹாவால் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்க முடியவில்லை.
பின்வாங்கும் யமஹா:
எனவே, புதிய நியோ'ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிடும் திட்டத்திலிருந்து பின்வாங்குவதாகத் தெரிவித்திருக்கிறது யமஹா. ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு நிறையவே வேறுபாடுகள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் யமஹா இந்தியாவின் தலைவர் ஈஷின் சிகானா. "இந்திய வாடிக்கையாளர்களுக்கு பொருளின் விலையும், தங்களுடைய தனிப்பட்ட பொருளாதாரத்தில் அது ஏற்படுத்தும் தாக்கமும் மிக முக்கியம். எரிபொருள் செலவைக் குறைக்கவே அதிகமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மக்கள் வாங்குகிறார்கள்" எனத் தெரிவித்திருக்கும் அவர், தங்களுடைய தயாரிப்பானது தங்களுடைய நிறுவனத்தின் கொள்கைகளைப் பறைசாற்றும் விதமாக தனித்துவமாக இருக்கவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். அவசரமாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடாமல், தனித்துவமான தயாரிப்பை வழங்க முடிவெடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் அவர். எனவே, யமஹாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இன்னும் சிறிது நாள் நாம் காத்திருக்க வேண்டும்.