ஏன் அதிக விலையைக் கொண்டிருக்கின்றன எலெக்ட்ரிக் கார்கள்?
செய்தி முன்னோட்டம்
முதலில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு தயக்கம் காட்டிய உலகம், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. எலெக்ட்ரிக் வாகன தொழிற்துறை மற்றும் எலெக்ட்ரிக் வாகன கட்டமைப்பின் வளர்ச்சியும் இதற்கு ஒரு காரணமாகக் கூறலாம்.
இந்தியாவில் இன்னும் அதிகளவிலான எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு இல்லையென்றாலும், கொஞ்சம் கொஞ்சமாக தற்போது வளர்ந்து வரும் துறையாக, அனைவருக்கும் தெரிந்த ஒரு துறையாக மாறியிருக்கிறது எலெக்ட்ரிக் வாகன துறை.
எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் மக்களுக்கு மிகப் பெரிய தடையாக இருப்பது அதன் விலை தான்.
ஒரே மாதிரியான எரிபொருள் வாகனத்தை விட, அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனின் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. ஆனால், ஏன் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருக்கிறது?
எலெக்ட்ரிக் வாகனம்
ஒரே தயாரிப்பு இரண்டு விலை:
உதாரணத்திற்கு சமீபத்தில் டாடா வெளியிட்ட நெக்ஸான் மற்றும் நெக்ஸான.ev ஆகிய இரண்டு மாடல்களை எடுத்துக் கொள்வோம். ஒன்று பெட்ரோலில் இயங்கக் கூடிய மாடல், மற்றொன்று அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன்.
டாடா நெக்ஸான் எரிபொருள் மாடலானது, ரூ.8.10 லட்சம் தொடங்கி ரூ.13 லட்சம் வரையிலான விலையில் வெளியாகியிருக்கிறது. மறுபுறம், டாடா நெக்ஸான்.ev எலெக்ட்ரிக் மாடலானது, ரூ.14.74 லட்சம் தொடங்கி ரூ.19.94 லட்சம் வரையிலான விலையில் வெளியாகியிருக்கிறது.
கிட்டத்தட்ட ஒரே அளவிலான பவரை மற்றும் டார்க்கை உற்பத்தி செய்யும், ஒரே மாதிரியான வசதிகள் மற்றும் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் இரண்டு கார்களில், எலெக்ட்ரிக் காரின் விலை மட்டும் மற்றொன்றை விட மிக அதிகமாக இருக்கிறது.
ஆட்டோமொபைல்
ஏன் அதிக விலையைக் கொண்டிருக்கின்றன எலெக்ட்ரிக் வாகனங்கள்?
எலெக்ட்ரிக் வாகனங்களின் அதிக விலைக்கான காரணத்தை ஒற்றை வார்த்தையில் கூற வேண்டும் என்றால், பேட்டரி தான். ஆம், ஒரு எலெக்ட்ரிக் காரில் பேட்டரியின் விலையே 40 முதல் 45%-தத்தை நிர்ணயிக்கிறது.
ஒரு பேட்டரியை உருவாக்குவதற்கு கோபால்ட், நிக்கல், லித்தியம் மற்றும் மேங்கனீஸ் என பல்வேறு இராசயன மூலப்பொருட்கள் தேவை. இவற்றை பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தே பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
மேலும், அவற்றை பூமியிலிருந்து தோண்டியெடுத்து, சுத்திகரிக்க ஆகும் செலவும் சேர்த்து பேட்டரியை மிக விலையுயர்ந்த பொருளாக்குகின்றன.
தற்போது இவற்றுக்கு அதிகரித்து வரும் தேவையும், இவற்றின் விலையோடு சேர்த்து பேட்டரிக்களின் விலையையும் உயர்த்தி வருகின்றன. இத்தனை விலையுயர்வுகளும் சேர்ந்து, அதிக விலையுடய எலெக்ட்ரிக் காராக நம்மிடம் எதிரொளிக்கிறது.