கார்களில் ஆறு ஏர்பேக்குகள் கட்டாயமில்லையா? என்ன கூறினார் நிதின் கட்கரி?
இந்தியாவில் பயணிகளின் பாதுகாப்பை மனதில் கொண்டு பல்வேறு பாதுகாப்பு மேற்றும் மேம்பாட்டு அறிவிப்புகள் மற்றும் உத்தரவுகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிடுவது வழக்கம். அப்படி கடந்த ஆண்டு, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும் ஆறு ஏர்பேக்குகளை கட்டாயமாக்கத் திட்டமிட்டு வருவதாக எக்ஸ் தளத்தில் பதிவொன்றைப் பதிவிட்டிருந்தார் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி. மேலும், இந்தாண்டு அக்டோபரில் இருந்து கட்டாய ஆறு ஏர்பேக்குகள் என்ற விதிமுறைானது நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாகவும் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பதிவிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் அவர். ஆனால், தற்போது டெல்லியில் நடைபெற்ற ஆட்டோமோட்டிவ் விழாவொன்றில் பேசியிருக்கும் அவர் ஆறு ஏர்பேக்குகள் விதிமுறையைக் கட்டாயமாக்கும் திட்டம் எதுவமில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு 6 ஏர்பேக்குகள் வழங்குவது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதிவிட்ட எக்ஸ் பதிவு:
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியது என்ன?
டெல்லியில் நடைபெற்ற ஆட்டோமோட்டிவ் விழாவில் பேசிய நிதின் கட்கரி, "விற்பனை செய்யப்படும் கார்கள் அனைத்திலும் கட்டாயமாக ஆறு ஏர்பேக்குகளை வழங்கவேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஆறு ஏர்பேக்குகள் வழங்கப்படும் கார்களை மக்கள் விருப்பப்பட்டால் வாங்கிக் கொள்ளாலாம். ஆறு ஏர்பேக்குகளை வழங்குவதும், வாங்குவதும், தயாரிப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பம்" எனத் தெரிவித்திருக்கிறார் அவர். முன்னதாக, 2021ம் ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும் முன் இருக்கைகளில் இருப்பவர்களைப் பாதுகாக்கும் விதமாக இரண்டு ஏர்பேக்குகளை வழங்குவதைக் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கட்டாயமாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.