எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன?
செய்தி முன்னோட்டம்
சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுத்து, கார்பன் உமிழ்வைக் குறைக்க, வருங்காலத்தில் எரிபொருள் வாகனங்களைத் தடை செய்து, எலெக்ட்ரிக் வாகனங்களை முதன்மையாக்க அனைத்து நாடுகளும் திட்டங்களை வகுத்து வருகின்றன.
இந்தியாவில், மக்களிடையே எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டு ஆர்வம் குறைவாகவே இருக்கிறது. இந்நிலையில், இந்திய மக்களிைடயே எலெக்ட்ரிக் வாகன விற்பனையை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை வழங்கியிருக்கின்றன மத்திய அரசும், மாநில அரசுகளும்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பதனை இந்தக் கட்டுரையில் காணலாம்.
முதலில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு FAME II திட்டத்தின் கீழ் மானிய விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய வழி செய்திருக்கிறது மத்திய அரசு.
எலெக்ட்ரிக் வாகனங்கள்
எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கும் போது கொடுக்கப்படும் சலுகைகள்:
மேற்கூறிய FAME II மானியமானது, குறிப்பிட்ட வாகனம் மற்றும் பேட்டரி அளவைப் பொறுத்து மாறுபடும். மேலும், கடந்த ஜூன் மாதம் இந்த மானிய அளவை மத்திய அரசு குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசைத் தவிர்த்து, அந்தந்த மாநில அரசுகள் மக்களிடம் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க, குறிப்பிட்ட சலுகைகளை தன்னிச்சையாக வழங்கி வருகின்றன.
தமிழகத்தில் சொந்தப் பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கினால், சாலை வரி, பதிவுக் கட்டணம் மற்றும் அனுமதிக் கட்டணம் ஆகியவை இல்லை.
மேலும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட புதிய எலெக்ட்ரிக் வாகனக் கொள்கைகளின் படி, வணிகப் பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் வாகனங்களில், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ,30,000-ல் தொடங்கி, எலெக்ட்ரிக் பேருந்துகளுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்கள்
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கடன் வசதிகள்:
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கடன்களை குறைந்த அளவு வட்டியில் வங்கிகள் வழங்கி வருகின்றன. குறைந்தபட்சமாக யூனியன் வங்கி 7.40% வட்டியிலும், எச்டிஎஃப்சி வங்கி 7.50% வட்டியிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கடன்களை வழங்கி வருகின்றன.
சில எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களே, குறிப்பிட்ட நிதி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து குறைந்த அளவிலான வட்டியுடன் எலெக்ட்ரிக் வாகனக் கடன்களைப் பெறுவதற்கு வழி வகை செய்திருக்கின்றன.
இந்த கூட்டணியின் பலனாக குறைந்தபட்சமாக 5.99% வட்டியிலேயே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கடன்களை நாம் பெற முடியும்.
குறைந்த வட்டியைத் தவிர்த்து, பூஜ்யம் முன்பணம், பூஜ்யம் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் அதிக தவணைக் காலம் எனப் பிற சலுகைகளும் எலெக்ட்ரிக் வாகனக் கடன்களைப் பெறும் போது வழங்கப்படுகின்றன.