தானியங்கி வாகனங்களில் சீன மென்பொருள் மற்றும் வன்பொருட்களுக்கு தடை; அமெரிக்கா அதிரடி முடிவு
ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, கனெக்டெட் மற்றும் தானியங்கி வாகனங்களில் சீன மென்பொருள் மற்றும் வன்பொருளுக்கு தடை விதிக்க அமெரிக்க வர்த்தகத் துறை முன்மொழிய உள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக சீன நிறுவனங்களால் அமெரிக்க டிரைவர்கள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றிய தரவு சேகரிப்புக்கான சாத்தியம் இருப்பதாக அஞ்சப்படுகிறது. முன்மொழியப்பட்ட ஒழுங்குமுறை சீனாவில் இருந்து முக்கிய தகவல் தொடர்பு அல்லது தானியங்கி ஓட்டுநர் அமைப்பு மென்பொருள் அல்லது வன்பொருள் கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வதையும் விற்பனை செய்வதையும் தடை செய்யும். அமெரிக்க வர்த்தகச் செயலர் ஜினா ரைமொண்டோ, கனெக்டெட் அமெரிக்க வாகனங்களில் சீன மென்பொருள், வன்பொருள் ஆகியவற்றால் ஏற்படும் குறிப்பிடத்தக்க அபாயங்களை முன்னரே எடுத்துரைத்தார்.
சீன இறக்குமதிகள் மீதான பரந்த கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக தடை உத்தரவு
முன்மொழியப்பட்ட தடையானது, அமெரிக்காவினால் சீன இறக்குமதிகள் மீதான பரந்த அளவிலான கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாகும். சமீபத்தில், பிடென் நிர்வாகம் சீன தயாரிப்புகளின் இறக்குமதிகள் மீது கடுமையான சுங்கவரி உயர்வை அறிவித்தது. இதில் மின்சார வாகனங்களுக்கு 100% வரி விதிக்கப்பட்டது. மேலும் எலக்ட்ரிக் வாகன பேட்டரிகள் மற்றும் முக்கிய தாதுக்கள் மீதான வரிகளும் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போதைய புதிய முன்மொழிவில் வணிகத் துறை இந்த விதிகளை இறுதி செய்வதற்கு முன் 30 நாட்களுக்கு பொதுமக்களின் கருத்துக்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. மென்பொருள் மீதான முன்மொழியப்பட்ட தடைகள் 2027இல் நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வன்பொருள் தடை ஜனவரி 2029 அல்லது 2030 மாதிரி ஆண்டில் நடைமுறைக்கு வரும்.