கார்களுக்கான வரிக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும்: மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர்
இந்திய ஆட்டோமொபைல் துறையின் முக்கிய பிரிவாக கருதப்படும், சிறிய கார்கள் மீதான ஒழுங்குமுறைச் சுமை அதிகமாக உள்ளது என்றும், அனைத்துப் பிரிவு வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான வரிக் கட்டமைப்பைக் கொண்டிருப்பது, இந்தத் துறையின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றும், மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர், ஆர்.சி. பார்கவா தெரிவித்துள்ளார். "உற்பத்தித் துறை வேகமாக வளர்ச்சியடைந்தால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும்," என்றும் அவர் கூறினார். "இது துரதிர்ஷ்டவசமாக நடைமுறை இடைவெளிகளால் பின்தங்கிய நிலையில் உள்ளது". "பெரிய கார்களை விட சிறிய கார்கள் மீதான ஒழுங்குமுறை மாற்றங்களின் சுமை மிக அதிகமாக உள்ளது, அது ஒட்டுமொத்த சந்தை நடத்தையையும் மாற்றுகிறது. " என்று பார்கவா கூறினார்.
கார்களுக்கான வரி கட்டமைப்பு
"ஆட்டோமொபைல் துறையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு, புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் நிலையான அதிகரிப்பு இருக்க வேண்டும். கார் உரிமையாளர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த துறை, தன்னைத்தானே சமநிலைப்படுத்திக் கொள்ளும் நிலை அமையும்". "ஆனால், இந்தியாவில் சிறிய கார்கள் பிரிவில், பெரிதாக எந்த வளர்ச்சியும் இல்லை. அனைத்து வளர்ச்சியும் உயர்தர பிரிவுகளில் நடைபெறுகிறது. அதை நினைவில் கொண்டு, சிறிய கார்கள் மீதான ஒழுங்குமுறை சுமையும் கருத்தில் கொண்டு, சிறிய மற்றும் பெரிய கார்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான வரி விகிதம் கூடாது என்பது என் வாதம்" என்று பார்கவா வலியுறுத்தினார். தற்போது, ஆட்டோமொபைல்களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு, வாகன வகையைப் பொறுத்து, கூடுதல் செஸ் விதிக்கப்படுகிறது.