டிராஃபிக் ஜாம் இனி கவலை இல்லை! விரைவில் உபர் ஆப்பில் பறக்கும் டாக்ஸி புக் செய்யலாம்
செய்தி முன்னோட்டம்
உலகின் முன்னணி போக்குவரத்து நிறுவனமான உபர், கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜோபி ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து உபர் ஏர் என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் உபர் செயலி வாயிலாகவே எலக்ட்ரிக் பறக்கும் டாக்ஸிகளை முன்பதிவு செய்ய முடியும். இந்த அதிநவீன வான்வழி டாக்ஸி சேவை இந்த ஆண்டு (2026) துபாயில் தனது முதல் பயணத்தைத் தொடங்க உள்ளது. நகர்ப்புறப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் இது ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
முன்பதிவு
முன்பதிவு செய்யும் முறை மற்றும் ஒருங்கிணைந்த பயணம்
உபர் செயலியைத் திறந்து உங்களின் சேருமிடத்தை உள்ளிடும்போது, அந்தப் பயணம் தகுதியுடையதாக இருந்தால் 'Uber Air powered by Joby' என்ற ஆப்ஷன் திரையில் தோன்றும். இதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரே ஒரு தட்டலில் உங்கள் முழுப் பயணத்தையும் முன்பதிவு செய்யலாம். இதில் உங்கள் வீட்டிலிருந்து வெர்டிபோர்ட் எனப்படும் வான்வழி டாக்ஸி நிலையத்திற்குச் செல்ல உபர் பிளாக் காரும், அங்கிருந்து வான்வழிப் பயணமும் ஒரே டிக்கெட்டில் ஒருங்கிணைக்கப்படும்.
சிறப்பம்சங்கள்
ஏர் டாக்ஸியின் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்
ஜோபி நிறுவனத்தின் இந்த எலக்ட்ரிக் ஏர் டாக்ஸி ஒரு பைலட் மற்றும் நான்கு பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 322 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இதில் உள்ள ஆறு புரப்பெல்லர்கள் செங்குத்தாக எழவும், பின் முன்னோக்கிப் பறக்கவும் உதவும். சாதாரண ஹெலிகாப்டர்களை விட மிகக் குறைந்த சத்தத்தையே இது எழுப்பும். இதனால் நகரச் சூழலில் அமைதியாக இயங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
விரிவாக்கம்
துபாய் மற்றும் சர்வதேச விரிவாக்கம்
துபாயில் இந்த சேவைக்காக துபாய் சர்வதேச விமான நிலையம், டவுன்டவுன் துபாய், துபாய் மெரினா மற்றும் பாம் ஜுமைரா ஆகிய நான்கு முக்கிய இடங்களில் வான்வழி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, துபாய் விமான நிலையத்திலிருந்து பாம் ஜுமைரா செல்ல சாலை வழியாக 45 நிமிடங்கள் ஆகும் நிலையில், இந்த ஏர் டாக்ஸி மூலம் வெறும் 10 முதல் 12 நிமிடங்களில் சென்றடையலாம். துபாயைத் தொடர்ந்து நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன் மற்றும் ஜப்பான் போன்ற நகரங்களுக்கும் இந்த சேவையை விரிவாக்கம் செய்ய உபெர் மற்றும் ஜோபி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.