
வெளியான மூன்றே நாட்களில் 10,000 புக்கிங்குகளைக் கடந்த 'ட்ரையம்ப் ஸ்பீடு 400'
செய்தி முன்னோட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவின் என்ட்ரி-லெவல் ப்ரீமியம் பைக் செக்மண்டில் புதிய ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400 ஆகிய பைக்குகளை அறிமுகப்படுத்தியது ட்ரையம்ப்.
இந்த பைக்குகளில் ஸ்பீடு 400 பைக்கை இந்த மாதம் முதலும், ஸ்கிராம்ப்ளர் 400-ஐ அக்டோபர் மாதம் முதலும் விற்பனைக்குக் கொண்டு வரவிருப்பதாகத் தெரிவித்த ட்ரையம்ப், ஸ்பீடு 400 பைக்குக்கான புக்கிங்குகளையும் தொடங்கியது.
இந்த பைக்கை இந்தியாவில் ரூ.2.33 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அந்நிறுவனம் வெளியிட்டிருந்தாலும், முதலில் முன்பதிவு செய்யும் 10,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ.10,000 தள்ளுபடியுடன் ரூ.2.23 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது ட்ரையம்ப்.
அறிமுகப்படுத்தப்பட்டு மூன்றே நாட்களில் தற்போது ஸ்பீடு 400 பைக்கானது 10,000 புக்கங்குகளைக் கடந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
ட்ரையம்ப்
ஸ்பீடு 400 பைக்கின் ஆன்-ரோடு விலையில் சர்ச்சை:
ஸ்பீடு 400 பைக்கானது, ரூ.2.33 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்படாலும், டீலர்ஷிப்களில் இதன் ஆன்-ரோடு விலை ரூ.3.38 லட்சம் விலையாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
பெங்களூருவில் உள்ள ஒரு டீலர்ஷிப்பில், ஸ்பீடு 400 பைக்குக்கு இன்சூரன்ஸ், ரோடு டேக்ஸ் மற்றும் ரெஜிஸ்ட்ரேஷனுடன், இன்ட்ரோ கிட் ஒன்றுக்காக ரூ.8,500-ம், டெலிவரி சார்ஜாக ரூ.17,000-மும் கூடுதலாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையானதைத் தொடர்ந்து, டீலர்ஷிப்களின் விதிமுறைகளின் படியே ஆன்-ரோடு விலை வசூலிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வோம் என்றும், ஸ்பீடு 400-ன் ஆன்ரோடு விலை நிர்ணயித்திற்கான வழிமுறைகளை ஜூலை 10 அன்று வெளியிடுவதாகவும், கூட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றன பஜாஜும் ட்ரையம்ப்பும்.