இந்தியாவில் மூன்றாவது தொழிற்சாலையை கட்டமைக்கத் திட்டமிட்டு வரும் டொயோட்டா
இந்தியாவில் புதிய கார் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றைக் கட்டமைக்கத் திட்டமிட்டு வருகிறது ஜப்பானை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா. ஏற்கனவே, இந்தியாவின் பிடாடி மற்றும் கர்நாடகாவில் இரண்டு டொயோட்டா தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து, தற்போது ஆண்டுக்கு 80,000 முதல் 1,20,000 கார்கள் வரை உற்பத்தி திறன் கொண்ட மூன்றாவது தொழிற்சாலையை கட்டமைக்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். தற்போது இந்தியாவில் தங்களுடைய இரண்டு தொழிற்சாலைகள் மூலம் 4,00,000 வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது டொயோட்டா. அந்நிறுவனத்தின் இந்த மூன்றாவது தொழிற்சாலையின் மூலம், தங்களுடைய இந்திய உற்பத்தி அளவை 30% வரை அதிகரிக்கும் திட்டமிட்டிருக்கிறது டொயோட்டா நிறுவனம்.
டொயோட்டாவின் புதிய எஸ்யூவி:
புதிய தொழிற்சாலை மட்டுமின்றி, அந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வகையில், புதிய எஸ்யூவி மாடல் ஒன்றையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது டொயோட்டா. இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் மாருதியில் ரீபேட்ஜான அர்பன் க்ரூஸர் எஸ்யூவி மற்றும் இன்னோவா ஆகிய இரு மாடல்களுக்கு இடைப்பட்ட மாடலாக, டொயோட்டாவின் புதிய எஸ்யூவி இருக்கும் எனக் கூறப்படுகிறது. டொயோட்டாவின் இந்தப் புதிய எஸ்யூவியானது 2026ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், புதிய தொழிற்சாலையில் கட்டமைப்புடன், 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறனை அடைய இலக்கு நிர்ணியித்திருக்கிறது டொயோட்டா.