சஃபாரி மற்றும் ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட்களின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு சஃபாரி மற்றும் ஹேரியர் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களை அடுத்த சில வாரங்களில் வெளியிடவிருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இந்த இரண்டு மாடல்களை கடந்த சில மாதங்களாகவே இந்திய சாலைகளில் சோதனை செய்து வந்தது டாடா. மேலும், இந்த மாடல்களின் ஸ்பை ஷாட் புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில், புதிய சஃபாரி மற்றும் ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களின் டீசரை வெளியிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ். முகப்பு மட்டும் தெரியும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த டீசர்களானது, முன்பு வெளியான சஃபாரி மற்றும் ஹேரியரின் ஸ்பை ஷாட் புகைப்படங்களுடனும் ஒத்துப் போகிறது.
சஃபாரி மற்றும் ஹேரியரில் என்னென்ன மாற்றங்கள்:
இரண்டு மாடல்களின் முன்பக்க டிசைன்களையும் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் மாற்றியமைத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், சற்று நீளமாக்கப்பட்ட கிரில்கள், டாடா நெக்ஸானில் வழங்கப்பட்டிருப்பது போலான முகப்பு விளக்கு கிளஸ்டர் மற்றும் வாகனத்தின் மொத்த அகலத்திற்கும் நீளும் DRL என பல்வேறு மாற்றங்களை டீசரிலேயே நம்மால் பார்க்க முடிகிறது. வெளிப்புற டிசனை மாற்றங்களைத் தவிர்த்து, உட்புறம் புதிய வசதிகள் சிலவும் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. இன்ஜினைப் பொருத்தவரை எந்த மாற்றமும் இல்லை. தற்போதைய மாடல்களில் பயன்படுத்தப்படும் அதே இன்ஜின் தான் புதிய ஃபேஸ்லிஃப்ட்களிலும் கொடுக்கப்படவிருக்கிறது. இந்த எஸ்யூவி ஃபேஸ்லிஃப்ட்களுக்கான முன்பதிவை வரும் அக்டோபர் 6ம் தேதி துவக்குகிறது டாடா மோட்டார்ஸ்.