2024ல் வெளியாகவிருக்கும் டாடா நிறுவனத்தின் புதிய எஸ்யூவி மாடல்கள்
2024ம் ஆண்டு பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய புதிய கார்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் மூன்று புதிய எஸ்யூவி மாடல்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது. பன்ச் எலெக்ட்ரிக் எஸ்யூவி, கர்வ் எஸ்யூவி கூப் மற்றும் ஹேரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய மூன்று எஸ்யூவி மாடல்களையே அடுத்த ஆண்டு இந்தியாவில் வெளியிடவிருக்கிறது டாடா மோட்டார்ஸ். ரூ.13 லட்சம் விலைக்குள் சன்ரூஃப், டிஸ்க் பிரேக்குகள், எல்இடி விளக்குகள் மற்றும் 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் ஆகிய வசதிகளுடன் சிட்ரன் eC3 மாடலுக்குப் போட்டியாக 2024ன் தொடக்கத்தில் வெளியாகவிருக்கிறது டாடா பன்ச் எலெக்ட்ரிக் எஸ்யூவி.
கர்வ் எஸ்யூவி கூப் மற்றும் ஹேரியர் EV:
பன்ச் EV-யின் வெளியீட்டைத் தொடர்ந்து, 2024ன் இடைப்பகுதியில் ரூ.14 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலைக்குள் புதிய கர்வ் எஸ்யூவியை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது டாடா. எரிபொருள் மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டு வகையான வேரியன்ட்களிலும் கர்வ் எஸ்யூவி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வேரியன்டானது, 500கிமீ ரேஞ்சுடனும், எரிபொருள் வேரியன்டானது 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு மாடல்களின் வெளியீடுகளைத் தொடர்ந்து, 2024ன் பிற்பகுதியில் ஹேரியர் EV மாடலை வெளியிடவிருக்கிறது டாடா. 500கிமீ ரேஞ்சைக் கொண்ட 60kWh பேட்டரி பேக், ADAS பாதுகாப்பு வசதிகள் மற்றும் 360 டிகிரி கேமரா என பல்வேறு வசதிகளுடன் வெளியாகவிருக்கிறது புதிய ஹேரியர் EV.