LOADING...
தமிழ்நாட்டிற்கு வரும் ஜாகுவார்; சென்னையில் உற்பத்தியாகப்போகும் சொகுசு கார்கள்; ₹9,000 கோடி முதலீட்டில் டாடா மோட்டார்ஸின் பிரம்மாண்ட ஆலை
சென்னை அருகே ஜாகுவார் லேண்ட் ரோவர் உற்பத்தி

தமிழ்நாட்டிற்கு வரும் ஜாகுவார்; சென்னையில் உற்பத்தியாகப்போகும் சொகுசு கார்கள்; ₹9,000 கோடி முதலீட்டில் டாடா மோட்டார்ஸின் பிரம்மாண்ட ஆலை

எழுதியவர் Sekar Chinnappan
Feb 07, 2026
11:29 am

செய்தி முன்னோட்டம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சொகுசு கார் பிராண்டான ஜாகுவார் லேண்ட் ரோவர் வாகனங்களைச் சென்னைக்கு அருகிலுள்ள பணப்பாக்கம் ஆலையில் அசெம்பிள் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 9, 2026 அன்று இந்த உற்பத்திப் பணிகள் முறைப்படி தொடங்கப்பட உள்ளன. இது இந்தியாவிலேயே சொகுசு கார்களைத் தயாரிக்கும் ஒரு மிகப்பெரிய மையமாகத் தமிழ்நாட்டை மாற்றும் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

முதலீடு

₹9,000 கோடி முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு

2024 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தப் பணப்பாக்கம் ஆலை, சுமார் ₹9,000 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்டது. இது தற்போதுள்ள தேவையை விட அதிகம் என்றாலும், எதிர்கால ஏற்றுமதி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு இவ்வளவு பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை முழுமையாகச் செயல்படத் தொடங்கும்போது, சுமார் 5,000 க்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாடல்கள்

எந்தெந்த மாடல்கள் உற்பத்தியாகும்?

எந்தெந்த மாடல்கள் முதலில் தயாரிக்கப்படும் என்பதை டாடா மோட்டார்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், சந்தை வட்டாரத் தகவல்களின்படி, ரேஞ்ச் ரோவர் எவோக் மாடல் தான் முதலில் இங்கு அசெம்பிள் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த ஆலையின் தயாரிப்பு வரிசைகள் மின்சார வாகனங்களைத் தயாரிப்பதற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, ஜாகுவார் லேண்ட் ரோவரின் வருங்கால எலக்ட்ரிக் கார்களும் இந்தியாவிலேயே தயாராக அதிக வாய்ப்புள்ளது. தற்போது புனேவில் உள்ள ஆலையில் ஜாகுவார் கார்கள் அசெம்பிள் செய்யப்படுகின்றன. புனேவில் இருந்து உற்பத்தி முழுமையாகச் சென்னைக்கு மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, இதுகுறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் பகிரப்படும் என்று டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாடு

ஏற்றுமதி மையமாக மாறும் தமிழ்நாடு

தமிழ்நாடு ஏற்கனவே இந்தியாவின் ஆட்டோமொபைல் ஹப் என்று அழைக்கப்படும் நிலையில், ஜாகுவார் போன்ற உலகத்தரம் வாய்ந்த சொகுசு கார்களின் வருகை மாநிலத்தின் பொருளாதாரத்திற்குப் பெரும் பலம் சேர்க்கும். உள்ளூர் உற்பத்தியின் மூலம் இந்த சொகுசு கார்களின் விலை இந்தியாவில் ஓரளவிற்குக் குறைய வாய்ப்புள்ளது. மேலும், இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்யவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

Advertisement