நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷனை வெளியிட்டது டாடா
கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியான டாடா நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷன் ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறது டாடா. இதற்கு முன்னர் டாடா வெளியிட்ட ஸ்பெஷல் எடிஷன் மாடல்களில் காஸ்மெடிக் அப்டேட்கள் மட்டுமே செய்யப்பட்டிருக்க, புதிய நெக்ஸான EV மேக்ஸின் டார்க் எடிஷனில் சில புதிய வசதிகளையும் கூடுதலாக சேர்த்திருக்கிறது டாடா. இந்த டார்க் எடிஷனில் புத்தம் புதிய 10.25 இன்ச் டச்ஸ்கிரீனை கொடுத்திருக்கிறது டாடா. இந்த செக்மன்டிலேயே பெரிய டச்ஸ்கிரீன் என இதனைக் கூறலாம். மேலும், அதன் ப்ளேஸ்மெண்டும் முன்பை விட சிறப்பாக, ஓட்டுபவர் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இருக்கிறது. ஆனால், இந்த டார்க் எடிஷனுடன் சஃபாரி மற்றும் ஹேரியரில் கொடுத்ததைப் போல ADAS வசதியை டாடா கொடுக்கவில்லை.
புதிய வசதிகள் மற்றும் விலை:
மற்ற டார்க் எடிஷன் மாடல்களைப் போல, எலெக்ட்ரிக் கார் மாடலிலும் உள்பக்கம் முழுமையான டார்க் ஷேடைக் கொடுத்திருக்கிறது டாடா. அதோடு, சன்ரூஃப், காற்றின் தூய்மையைக் காட்டும் AQI டிஸ்பிளே, க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், கூலான க்ளவ் பாக்ஸ், பின்னபக்க AC வெண்ட்கள் என பல புதிய வசதிகளை கொடுத்திருக்கிறது. பாதுகாப்புக்காக நான்கு வீல்களிலும் ABS-உடன் கூடிய டிஸ்க் பிரேக், இரண்டு ஏர்பேக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கிறது. வெளிப்புற டிசைனானது டாடாவின் மற்ற டார்க் எடிஷன் மாடல்களைப் போலவே இருக்கிறது, இன்ஜினிலும் எந்த மாற்றமும் இல்லை. மற்ற டார்க் எடிஷன் மாடல்கள் ஸ்டாண்டர்டை விட ரூ.20,000 அதிகமாக விலையில் வெளியான நிலையில், இந்த டார்க் எடிஷனை ரூ.55,000 அதிகமாக விலையில் வெளியிட்டிருக்கிறது டாடா.