ரூ.6 லட்சத்திற்கும் குறைவான விலையில் புது கார் வாங்க முடியுமா? உங்களுக்கான பதில்
செமிகண்டக்டர் பற்றாக்குறை, அதிகரித்து வரும் மூலதன செலவுகள் மற்றும் கடுமையான அரசாங்க விதிமுறைகள், விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடையூறுகள் போன்றவற்றால் சமீப காலமாக கார் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. மேலும், விலை தொடர்ந்து உயரும் என்பதே ஆட்டோமொபைல் சந்தை நிபுணர்களின் கணிப்பாக இருந்து வருகிறது. இதனால், குறைந்த விலையில் புது கார் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் இருந்தாலும், விலை மலிவான கார்களை பலரும் தேடி வருகின்றனர். இந்நிலையில், விலை மலிவான கார்களை வாங்க விரும்புபவர்களுக்காகவே, சந்தையில் இப்போது ரூ.6 லட்சத்திற்குள் சில கார்கள் இந்தியாவில் கிடைக்கின்றன. அவ்வாறு கிடைக்கும் கார்களின் பட்டியலை இதில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி ஆல்டோ கே10
மாருதி சுஸுகி இன்னும் நாட்டிலேயே மிகவும் மலிவு விலையில் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. ஆல்டோ800 இப்போது நிறுத்தப்பட்ட நிலையில், ஆல்டோ கே10 குறைந்த விலையில் கிடைக்கிறது. மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.99 லட்சம் முதல் ரூ.5.96 லட்சம் வரை உள்ளது. இந்த ஹேட்ச்பேக் காரின் டாப்-ஸ்பெக் மாடல் ரூ.6 லட்சத்திற்கு மேல் இருந்தாலும், மலிவு விலையில் வாங்க நினைப்பவர்கள் குறைந்த மற்றும் நடுத்தர ஸ்பெக் வகைகளை வாங்கலாம். இதில் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டாலும், சிஎன்ஜி எரிபொருளை பயன்படுத்தும் வசதியும் இதில் வழங்கப்படுகிறது. எனினும், அதிக சலுகை வழங்கப்படாவிட்டால், சிஎன்ஜி விருப்பம் ரூ.6 லட்சத்தில் சாத்தியமில்லை. ஆனால், பெட்ரோல் மாடலில் ரூ.6 லட்சத்திற்கு கீழே வாங்க முடியும்.
மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ
எஸ்-பிரஸ்ஸோ மாருதி சுஸுகியின் மற்றொரு மலிவு விலை காராகும். இது ஆல்டோ கே10 காரில் உள்ள பல அம்சங்களையும் கொண்டுள்ளது. மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.26 லட்சம் முதல் ரூ.6.11 லட்சம் வரை உள்ளது. இதிலும், ஆல்டோ கே10 காரைப் போல் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டு விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. அதே சமயம் ஆல்டோ மாடல் காரைப் போல் அல்லாமல், இதில் டாப்-ஸ்பெக் வகைகளும் ரூ.6 லட்சத்திற்கும் கீழே கிடைக்கிறது. இருப்பினும், வாங்குபவர்கள் லோயர் மற்றும் மிட்-ஸ்பெக் வகைகளைப் பார்க்கலாம்.
ரெனால்ட் க்விட்
க்விட் இந்தியாவில் ரெனால்ட்டின் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் காராகும். அதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.69 லட்சம் முதல் ரூ.6.44 வரை உள்ளது. ரெனால்ட் க்விட் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. ரூ.6 லட்சம் பட்ஜெட்டில், வாடிக்கையாளர்கள் இந்த வகை ஹேட்ச்பேக்கின் குறைந்த மற்றும் நடுத்தர-ஸ்பெக் வகைகளை வாங்க முடியும். முன்னதாக, க்விட் 0.8 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் மிகவும் மலிவு விலையில் இருந்தது. ஆனால் தற்போது அந்த மாடல் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது. அதே சமயம், விலை உயர்வு காரணமாக புது கார் அல்லாமல், பழைய கார்களை வாங்கும் போக்கும் சமீப காலமாக மிகவும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.